உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

வேகத்தை குறைக்காதீர்! விவேகத்தை மறக்காதீர் (50/100)

நம்மைப் போல நாலு பேர் வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ள துலாம் ராசி அன்பர்களே!

பிரதான கிரகங்களில் குருபகவான் வருட முற்பகுதியில் நல்லருள் பார்வை தந்து உங்கள் வாழ்வு வளம்பெற உதவுவார். ஏழரைச்சனி, ராகு, கேதுவின் அமர்வு சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். மே மாதத்துக்கு பிறகு, பெயர்ச்சியாகும் அஷ்டம குருவின் நிலையும் அவ்வளவு சிறந்ததல்ல. நீங்கள் சிறந்த அறிவும், செயல்திறன் கொண்டவராக இருந்தாலும் கூட, இந்த ஆண்டில் உங்கள் நலம் விரும்புபவரிடம் தேவையான ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. எந்தச் செயல்பாட்டிலும் கவனமாக கால் வைப்பது பிற்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும்.

பணவரவைவிட செலவு அதிகரிக்கும்.  உங்கள் கருத்தில் நியாயம் இருப்பினும், அதை மற்றவர்களிடம் திணிக்க முயல்வதை நிறுத்தி விடுங்கள். வீடு, வாகனத்தில் இப்போது இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது. தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவதால் அவரது அன்பு, ஆசியும் நல்லவிதமாக கிடைக்கும். புத்திரர்கள் கவனக்குறைவான செயல்களால் படிப்பு, திறமையில் குளறுபடி எதிர்கொள்வர். தகுந்த ஊக்கமும் பயிற்சி முறையும் அவர்களின் படிப்பு சிறக்க உதவும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு அளவான பணவரவு இருக்கும். இஷ்ட, குலதெய்வ வழிபாட்டில் தவறாமல் பங்கேற்பது சிரமங்களைக் குறைக்கும். உடல்நலம் சுமார் என்பதால், ஒவ்வாத உணவு, தேவையற்ற வஸ்துக்களை தவிர்ப்பது அவசியம். கடன் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. சொத்தின் பேரில் கடன் பெற்று சரிசெய்து விடலாம். நெருப்பு, நீர்நிலை சம்பந்தமான இடங்களில் கூடுதல் கவனம் தேவை.
கணவன், மனைவி ஒற்றுமையில் பாதகமில்லை. குடும்ப சிரமங்களை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுவார்கள். திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி நிறைவேறும்.ஆனால், ஆடம்பரமாக நடத்தும் அளவு பணமில்லாமல் போனதே என்ற சிறு மனக்குறை இருக்கும். நண்பர்கள் ஆதரவு மனப்பாங்குடன் நடந்துகொள்வர். மூத்த சகோதர, சகோதரிகள் இயன்ற அளவில் உதவிபுரிவர். பயணங்களின்போது பொருட்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். ஏழரைச்சனி காலம் என்பதற்காக  உங்கள் செயல்பாடுகளில் வேகத்தை குறைக்க வேண்டாம். ஆனால், விவேகம் மிகவும் முக்கியம்.

தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கு மிக கவனமான போக்கும் உழைப்பும் மட்டுமே வளர்ச்சியைத் தரும். ஆர்டர்கள் ஓரளவுக்கே கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். மற்ற தொழிலில் உள்ளவர்கள் புதிய உத்திகளை பயன்படுத்தி திட்டமிட்ட உற்பத்தி இலக்கை அடைவர். நிர்வாகச்செலவை ஒழுங்குபடுத்தி விவேகத்துடன் சமாளிக்க வேண்டியிருக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகளுக்கு விற்பனை சரிவாலோ அல்லது விற்பனை அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் பெற இயலாமல் போகும். மற்ற வியாபாரிகள் போட்டியை சமாளிக்க சிரமப்படுவர்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அன்றைய வேலையை அன்றே முடித்தால் தான், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாகாமல் தப்பலாம்.
கவனம். சக பணியாளர்களிடம் பரஸ்பர நட்பு தொடரும். சிலருக்கு சக பணியாளர்கள் மூலமோ, உயரதிகாரிகள் மூலமோ தேவையற்ற பிரச்னைகள் வரும். சலுகைகளை கேட்க உகந்த நேரம் இதுவல்ல. கிடைக்கிற ஊதியத்தில் பணிகளை ஏற்பதால் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதி கிடைக்கும்.  பணியில் படும் சிரமங்களுக்குரிய மருந்து வீட்டில் கிடைத்து விடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்வது நல்லது. நிர்வாகத்தின் கண்டிப்பு சிலருக்கு வந்தாலும் வேலைக்கு சிரமம் எதுவும் வராது. குடும்பப் பெண்கள் கணவரின் பணி மற்றும் சூழ்நிலைகளை உணர்ந்து ஆறுதல் மனப்பாங்குடன் நடந்து கொள்வர். குடும்பச் செலவுக்கு தேவையான பணம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். சிக்கன நடைமுறை நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அளவை தக்கவைக்க கணவர், தோழியின் உதவி கிடைக்கப்பெறுவர். முக்கிய தேவைகளுக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

மாணவர்கள்: மாணவர்கள் மிக கவனமாக படிப்பதால் மட்டுமே, தரதேர்ச்சியை தக்கவைக்க இயலும். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக இருப்பர். படிப்புக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது. உங்களைப் பற்றி பெற்றோரின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதற்கேற்றாற் போல் கவனமாகப் படித்து அவர்களை மகிழச் செய்யுங்கள்.

அரசியல்வாதிகள்: இருக்கிற நற்பெயரை தக்கவைத்துக் கொள்வதால் மட்டுமே ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெற முடியும். பணிகளை நிறைவேற்றுவதில் குறுக்கீடுகள் வரலாம். மன உறுதியே இந்தக் காலத்தில் உங்களுக்கு மாற்றம் தரும்.

விவசாயிகள்: மகசூல் சுமாராக இருக்கும். மாற்றுப்பயிர் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தினால் பணவரவு சீராகும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் திருப்திகரமான பணவரவும் உண்டு.

குருபெயர்ச்சி : ராசிக்கு 3,6 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் அனுகூல பலன் உண்டாகும். குடும்பத்தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் வருமானம் அதிகமாகும். மங்கல நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தேறும். சமூகப்பணியில் ஆர்வம் உண்டாகும். மே17 முதல் ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். அவரின் 5,7,9 ஆகிய பார்வைகள் 12,2,4 ஆகிய ஸ்தானங்களில் விழுகின்றன. ஆண்டின் பிற்பகுதியிலும்
குருவின் பார்வை பலத்தால் நற்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கொடுக்கல் வாங்கல் முயற்சிகளில் அனுகூலம் உண்டு. நடக்காது என்று எண்ணிய செயல் கூட குருவின் பார்வை பலத்தால் நடந்தேறும். சிலருக்கு புதுபிளாட் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற யோகமும் கை கூடும்.

ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு இரண்டாம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், கல்வி,வேலைவாய்ப்பு போன்ற தேவைக்காக குடும்பத்தை விட்டு
பிரிந்திருக்க நேரிடும். பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை தேவைப்படும். மே 17ல் ரிஷப குருவால், ராகுவால் ஏற்படும் துன்பம் அனைத்தும் நீங்கும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு உங்கள் ராசியான துலாமிற்குள் பிரவேசிக்கிறார். கேது ராசிக்கு எட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், உடல்நிலையில் ஆரோக்கியக்குறைவு உண்டாகும். மருத்துவசிகிச்சையும் தேவைப்படும். கடின அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆபத்தான பணியில் ஈடுபடுவோர், நெருப்பு, மின்சாரம் சார்ந்து பணியாற்றுபவர்கள் விழிப்போடு இருப்பது நல்லது. குருவின் ரிஷப மாறுதலால், ஆண்டின் பிற்பகுதியில் கேதுவின் கெடுபலன் விலகிவிடும். டிச.2ல் கேது மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.

பரிகாரம் : லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.

பரிகாரப் பாடல்

மருநிறை மலரில் வாழ்வோய் போற்றி
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள்பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
தெருள்தரு அறிவின் திறனே போற்றி
திருமாமகளே செல்வி போற்றி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !