உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

மே வரை சும்மா அதுக்குப் பிறகு யம்மா (60/100)

முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கையுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

பிரதான கிரகங்களில் குரு மே மாத பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளனர். ஏழரைச் சனி ஆரம்பத்திருக்கிறது. ராகு,கேதுவின்
அமர்வும் அவ்வளவு சரியாக இல்லை. குருவின் பலத்தால் பணவரவைத் தடுக்கும் விஷயங்கள் கட்டுப்படும். போதுமான அளவுக்கு பணம் வரும். விரயச்சனியால் ஏற்படும் செலவுகள் குறையும். அனுபவம் இல்லாத பணிகளில் ஈடுபடக் கூடாது. மூத்த சகோதர, சகோதரிகள் நீங்கலாக மற்ற உறவினர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். பயணங்களில் மிதமான வேகம் பின்பற்ற வேண்டும். தாயின் அன்பு, ஆசி எப்பொழுதும்போல் உண்டு. புத்திரர்கள் நண்பரைப்போல இணக்கமாக நடந்து கொள்வர். ஒருவர் கருத்து மற்றவருக்கு உதவும் வகையில் இருக்கும். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தின் அளவு உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். எதிரிகளால் வருகிற தொல்லைகளை சரிசெய்ய தகுந்த மாற்று உபாயங்களை பின்பற்ற வேண்டும். உடல்நிலை தொந்தரவு தருகிற கிரகநிலை உள்ளது. ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை, சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற சேமிப்பு பணம் செலவாகும்.

கணவன், மனைவி பொறுமையுடன் செயல்படுவதால் சச்சரவு வளர்க்காமல் தவிர்க்கலாம். நண்பர்களிடம் கடன் பெறுவது, கொடுப்பது ஆகிய செயல்களை தவிர்ப்பது நல்லது. சிலர் வீடு, பணியிட மாற்றம் பெறுவர். விலை மதிப்புள்ள பொருள் இரவல் கொடுப்பது, பிறர் பொருளை பாதுகாப்பது ஆகிய செயல்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை முக்கியத்துவம் கருதி மேற்கொள்வது நல்லது. திருமண முயற்சி வருட பிற்பகுதியில் நிறைவேறும். மே மாதம் வரை நிலைமையை சமாளிக்க கஷ்டப்பட்டாலும், அம்மாதத்தில் நடக்கும் குருபெயர்ச்சி உங்களுக்கு யம்மா என்று ஆச்Œரியப்படும் வகையில் நல்ல பலன் வழங்கும். 

தொழிலதிபர்கள்:மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், காகிதம், தோல், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் ஆண்டின் முற்பகுதியில் சுமாரான லாபமும், பிற்பகுதியில் குருவின் ஸ்தானம் மற்றும் பார்வை பலத்தால் கூடுதல் லாபமும் பெறுவார்கள். அதிக உழைப்பும், சிக்கனச்செலவும் பொருளாதார நிலையில் ஏற்பட இருக்கும் சிரமங்களை பெருமளவில் குறைக்கும். உபதொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர் சங்கங்களில் பதவி வகிப்போருக்கு சக நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகளுக்கு விற்பனையில் சராசரி நிலைமையும் சுமாரான லாபமும் இருக்கும். வருட பிற்பகுதியில் குருவின் நிலையால் அதிக லாபம் கிடைக்கும். அளவான கொள்முதல் செய்வதால் முதலீட்டு தேவைகளை குறைக்கலாம். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது நன்மை தரும். பணியில் வருகிற
குளறுபடிகளை தாமதமின்றி சரிசெய்வதால் நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். மே மாதம் வரை சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும், பின் விலகி நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ஓவர்டைம் போன்ற சலுகைகள் குறையும் என்பதால், வருமானத்தில் சற்று இடிக்கும். வழக்கமான சலுகைகள் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில் குழப்பமான மனநிலை கொள்வர். பணிகள் தாமதம் ஆவதால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்ள நேரிடும். வருட பிற்பகுதியில் பணி நிலைமை சீராகும். குடும்பப் பெண்கள் பிறந்த வீட்டுப்பெருமையை கணவரிடம் விவாதித்து பிரச்னையை கிளறக்கூடாது. வீட்டுச்செலவுக்கு சிரமமாக இருக்கும். சிக்கனம் அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபம் பெறுவர். புதிய கிளைகளை துவங்கும் முயற்சியை யோசித்து செய்வது நலம்.

மாணவர்கள்: மாணவர்கள் கவனக்குறைவால் படிப்பில் பின்தங்க நேரிடும். கூடுதல் முயற்சியால் தரதேர்ச்சியை தக்கவைக்கலாம். படிப்புக்கான பணவசதி பெற தாமதமாகும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர்த்த, பிற விவாதம் கூடாது. பயணங்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்: உங்களிடம் நன்மை பெற்ற சிலர் நன்றி மறந்து செயல்படுவர். அவர்கள் புதியவர்களை நாடிச்சென்று உதவுவதால், உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படும். எதிரிகளின் கெடுசெயல் உங்களை மனம் தளர வைத்தாலும், மாற்றுத்திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். பொது விவகாரங்களில் சமரசம் பேசும் தருணங்களில், இருதரப்பு கருத்துக்களையும் மதித்து செயல்பட வேண்டும். இதனால் பகை வராது. 

விவசாயிகள்: சாகுபடி செய்ய அதிக செலவு ஏற்படும். சுமாரான மகசூல் இருக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணம் குடும்பத்தேவைகளை நிறைவேற்ற பெருமளவில் உதவும்.

குருபெயர்ச்சி : ராசிக்கு 2,5 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார்.  இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியில் மந்தநிலை, உடல்நலக்குறைவு, தடுமாற்றம்  ஏற்பட வாய்ப்புண்டு. எந்தச்செயலையும் பொறுமையுடன் அணுகுவது அவசியம். மே17 முதல் குரு ரிஷபத்திற்கு பெயர்ச்சியானதும், 5,7,9 ஆகிய பார்வைகள் 11,1,3 ஸ்தானங்களில் பதிகின்றன. இதனால் நற்பலன் உண்டாகும்.  மனதில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களின் வாழ்வு மேம்படும். திடீர் வாய்ப்பினால் வருமானம் உயரும். தொழிலில் எதிர்பார்ப்பை விட லாபம் அதிகரிக்கும். சேமிக்கவும் இடமுண்டு. உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணிச்சுமையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

ராகுகேது பெயர்ச்சி :  விருச்சிகத்தில் ராகு இருப்பதால், முயற்சிகளில் தடை ஏற்படும். செயல் நிறைவேற காலதாமதம் உண்டாகும். குடும்பத்தேவைக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரும் நிர்பந்தம் சிலருக்கு ஏற்படும். மே 17ல் ரிஷப குருவின் பார்வையால் ராகுவால் ஏற்பட்ட சிரமம் நீங்கும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு துலாம் ராசியில் நுழைகிறார்.  கேது ராசிக்கு ஏழாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவர். கடின அலைச்சலால் சோர்வும், அசதியும் உண்டாகும். எதிரிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது.  குருவின் ரிஷப மாறுதலால், கேதுவின் கெடுபலன் குறையும். தெய்வ சிந்தனை பிறக்கும். எண்ணம், சொல், செயலில் சாந்தம் கமழும். ஆண்டின் இறுதியில் கேது, ராசிக்கு ஆறாம் வீடான மேஷத்திற்கு இடம் பெயர்கிறார்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடுவதால்,  சிரமம் விலகி நன்மை சேரும்.

பரிகாரப் பாடல்

புத்தியும் பலமும் புகழோடு துணிவும்
நெஞ்சில் பத்தியும் அச்சமிலாப் பணிவும்
நோயிலா வாழ்வும் உத்தம ஞான ஆற்றலும்
இம்மை வாழ்வில் அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !