தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
கற்கண்டு காத்திருக்கும் காலநேரம் வந்திருச்சு! (80/100)
ஆழம் தெரிந்தே எதிலும் கால் வைக்கும் தனுசுராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களில் ஞானகாரகனான கேது வருடம் முழுவதும் அளப்பரிய நற்பலன்களை அள்ளி வழங்குவார். சனி அனுகூல இடத்தில் இருப்பதால், வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்துவார். ராகுவின் அமர்வினால் மட்டும் இடையூறு வந்து விலகும். குரு மே மாதம் வரை சிறப்பாகவும், அதன் பிறகு சுமாரான பலன்களையும் தருவார். அவரது ஸ்தான பலம் சுகக்குறைவை உண்டாக்கும் என்றாலும், பார்வை பலம் நற்பலன்களைத் தரும். மொத்தத்தில் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டே! தெளிவாகவும், திறமையுடனும் செயல்பாடுகளைச் செய்து சாதனை புரிவீர்கள். பேச்சில் நிதானம் இருக்கும். குடும்பம் மற்றும் நண்பர்கள் மீதான அக்கறை அதிகரிக்கும். சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்.
வீடு, பிற சொத்து வகையில் எண்ணி இருந்த மாற்றங்களை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர் குடும்ப சுபநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். பூர்வசொத்தில் தாராள பணவரவு கிடைத்து குடும்பத்தின் முக்கியத் தேவை நிறைவேறும். புத்திரர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவர். அவர்களது படிப்பிலும் திறமையிலும் வளர்ச்சி அதிகரிக்கும். கார், இரு சக்கர வாகனங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். இஷ்டதெய்வ அருள் பலமாக துணை நின்று, வாழ்வு வளம்பெற உதவும். புதிய சொத்து சேர்க்கை கிடைக்கும். உடல்நலம் படிப்படியாக சீராகும். எதிரிகள்
உங்களைக் கண்டு ஒதுங்கிப்போகும் நிலை இருக்கிறது. நீண்டகால கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வழக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். திட்டமிட்ட நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. மூத்த சகோதர, சகோதரிகளுக்கு இயன்ற உதவியை மனமுவந்து செய்வீர்கள். வெளிமாநிலம், வெளிநாடு பயணம் செல்ல திட்டமிடுவோர் மகிழ்ச்சிகர அனுபவங்களைப் பெறுவார்கள். மே மாதத்துக்குள் திருமண முயற்சி நிறைவேறும்.மொத்தத்தில் கற்கண்டு காற்றடிக்கும் இனிய ஆண்டு.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், காகிதம், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழில் சார்ந்த வகையில் நன்மை பெற புதிய முயற்சியை செயல்படுத்துவார்கள். எதிர்பார்த்த வளர்ச்சியும் வருமானமும் வந்து சேரும். பழைய பாக்கியைப் பெறுவதில் இருந்த தாமதம் விலகும். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தி, தரத்தை உயர்த்துவார்கள். புதிய ஒப்பந்தங்களாலும் தாராள பணவரவு உண்டு. பணியாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு தருவர். உபதொழில் துவங்குகிற திட்டம் நிறைவேறும். தொழிலதிபர் சங்கங்களில் பதவி, பொறுப்பு கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகள் போட்டி குறைந்து அதிக விற்பனை காண்பர். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிக லாபம் உண்டு. எதிர்பார்த்ததை விட அதிக விற்பனை நடக்கும்.சரக்குவாகனங்களாலும் லாபம்உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சுமூக சூழ்நிலை அமையப்பெறுவர். கடினமாக தோன்றிய பணிகள்கூட மிக எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஓவர்டைம் போன்றவற்றால் எதிர்பார்த்த அளவு வருமானம் உயரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்றி, நிர்வாகத்தின் பாராட்டு, சலுகைகளைப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து வாழ்வு சிறக்க பாடுபடுவர். உறவினர்கள் மதிப்பு, மரியாதை தருவர். நகை, உடை என அமர்க்களமாக இருப்பீர்கள். வீட்டுத்தேவை போக சேமிக்கும் அளவில் நிதிநிலை அமையும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு அதிக உற்பத்தி, எதிர்பார்த்த விற்பனையால் தாராள லாபம் அடைவர்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய மாணவர்களின் படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உற்சாகமாகப் படித்து மதிப்பெண்களில் முன்னேற்றம் காண்பர். மற்ற துறை மாணவர்கள் பெற்றோர் ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் வகையில் படிப்பர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களும் சக மாணவர்களின் அனுசரணையுடன் படிப்பில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பு பெறுவதில் இருந்த தாமதம் விலகும்.
அரசியல்வாதிகள்: சிறப்பான நடவடிக்கைகளால் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையும் புகழும் பெறுவீர்கள். எதிரிகளே வியக்கிற வகையில் வாழ்க்கைத்தரம் உயரும். புத்திரர்களின் உதவியும், குடும்பத்தினரின் அனுசரிப்பு தன்மையும் உங்கள் அரசியல் பணிக்கு பெருமை சேர்க்கும். தாராள பணவரவால் புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.
விவசாயிகள்: திருப்திகரமான மகசூல் கிடைத்து அதிக லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு. நிலப்பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 1,4 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் நற்பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்தில் வருமானம் உயரும். பிள்ளைகள் கல்வி,வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குவர். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 10, 12, 2 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அரசுவகையில் அனுகூலம் உண்டு. சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் குரு பார்ப்பதால் வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். பேச்சில் இனிமை உண்டாகும். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு 12ம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், பயணத்தின் போது பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.
நிர்பந்தம் காரணமாக வெளியூர், வெளிநாடு செல்வதன் மூலம் சிரமத்திற்கு வாய்ப்புண்டு. மே 17ல் குருபெயர்ச்சிக்குப்பின் ராகுவால் ஏற்படும் பிரச்னை நீங்கும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு அனுகூலம் தரும் விதத்தில், பதினோராம் வீடான துலாமிற்குள் நுழைகிறார். கேது ராசிக்கு ஆறாம் வீட்டில் அனுகூலத்துடன் ஆண்டு முழுவதும் இருக்கிறார். இதனால், செய்யும் பணிகளில் ஆர்வம் பிறக்கும். எதிரியின் எண்ணங்கள் தவிடு பொடியாகும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பழைய கடன் நெருக்கடி தீரும். ஆண்டின் இறுதியில் கேது ராசிக்கு ஐந்தாம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : பைரவரை வழிபடுவதால் பலன்களின் அளவு மேலும் அதிகரிப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்
ஏதேது செய்தாலும்
ஏதேது சொன்னாலும்
ஏதேது சிந்தித்திருந்தாலும்-மாதேவா
நின்செயலே என்று
நினதருளாலே உணரின்
என் செயலே காண்கிலேனே!