உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை புடினிடம் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வழிபாடு

திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை புடினிடம் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வழிபாடு

தென்காசி: தென்காசி உலகம்மன் உடனுறை காசி விசுவநாதசுவாமி கோவிலில், திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை ரஷ்ய அதிபர் புதினிடம் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலரும் வாஞ்சி இயக்க நிறுவனருமான ராமநாதன், கடையம் கோபால் ஆகியோர் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.


இதுகுறித்து ராமநாதன் கூறியதாவது: திருக்குறளின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வழிபாடு நடத்தினோம். திருக்குறளை உலகப் பொதுமறை என்று பெருமையாகக் கூறும் நாம், அதை உலகத் தலைவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை.


முந்தைய காங்கிரஸ் பிரதமர்களோ, தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்களோ, திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை வெளிநாட்டுத் தலைவர்களிடமோ, வடமாநிலத் தலைவர்களிடமோ வழங்கியதாகத் தெரியவில்லை. திருக்குறளைப் போற்றிப் பேசும் திராவிட இயக்கத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களது மொழியில் திருக்குறளை வழங்கியிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, தமிழர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை ரஷ்ய அதிபர் புதினிடம் வழங்கியுள்ளார். அவர் நினைத்திருந்தால் சமஸ்கிருதம் அல்லது இந்தி நூல்களின் மொழிபெயர்ப்புகளை வழங்கியிருக்கலாம். ஆனால், தமிழின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளார்.


2026 தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 28 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் தோல்வியடைந்த பின்னரும், தமிழக மக்கள் மீது வெறுப்புக் கொள்ளாமல் திருக்குறளின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது. மோடியின் இந்தச் செயலின் முக்கியத்துவத்தைத் தமிழர்கள் உணர வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழுக்கும், திருக்குறளுக்கும் அவர் அளித்துள்ள முக்கியத்துவத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் சென்னை வரும் நாளில் தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !