மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல் (55/100)
முன்னெச்சரிக்கை உணர்வுள்ள மீனராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களில் குரு வருட முற்பகுதியில் நற்பலனையும், மே மாத பெயர்ச்சிக்குப் பிறகு சாதகமற்றும் உள்ளார். ராகு, சனி உங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். கேது வருடம் முழுவதும் அளப்பரிய செல்வ வளம் தருவார். பேச்சில் இனிமை கலந்திருப்பது நல்லது. உங்கள் சொல்லுக்கு வரவேற்பு இருக்கிற இடங்களில் மட்டும் பேசுவது நல்லது. எந்த ஒரு செயல்பாட்டிலும் தகுந்த முன்யோசனை மட்டுமே நன்மை தரும்.
இளைய சகோதர, சகோதரிகள் பாசத்துடன் நடந்து தேவையான உதவி வழங்குவர். முருகப்பெருமானின் பரிபூரண அருட்கடாட்சம் உங்களுக்கு உண்டு. பணவரவு அதிகம் பெறுவதற்கான புதிய வாய்ப்புக்கள் வரும். வீடு, வாகன வகையில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரர்கள் ஆடம்பர செலவு செய்வதில் ஆர்வம் கொள்வர். இஷ்ட, குலதெய்வ வழிபாடு திட்டமிட்ட வகையில் சிறப்பாக நிறைவேறும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு அளவான பணவரவு கிடைக்கும். சொத்து ஆவணங்களின் பேரில் கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. வருட ஆரம்பத்திலேயே திருமண முயற்சிகளை நிறைவேற்றி விடுவது நல்லது.
உடல்நலம் திருப்தியாக இராது. சிறிய தொந்தரவு என்றாலும், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலை உணர்ந்து நல்வழியில் நடைபோடுவர். வெளியூர் பயணங்களால் கூடுதல் செலவு ஏற்படுமளவு, நன்மையின் அளவு இருக்காது. நடப்பதெல்லாம் அவன் செயல், அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற தைரியமான மனநிலையுடன் எதிர் நீச்Œல் @பாடுபவர்களுக்கு இந்த புத்தாண்டு இனிய ஆண்டாக அமையும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், காகிதம், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் கடும், போட்டியும் போட்டியை சரிசெய்ய வழி புலப்படாத சூழ்நிலையும் பெறுவர். உங்கள் நலம் விரும்புபவர்களின் ஆலோசனை பெற்று நிலைமையை சரிசெய்வது நற்பலன் தரும். அளவான மூலதனம் போதும். லாபம் ஓரளவுக்கு இருக்கும். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் இதே நிலை தான். புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். தொழில் சிரமம் இருந்தாலும், தொழிற்சாலை விரிவாக்கப்பணி மற்றும் புதிய இயந்திரங்கள் வாங்குதல் போன்றவை நிறைவேறும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோ மொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், காகிதம், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகள் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்வர். லாபம் சுமாராக இருக்கும். மற்ற வியாபாரம் செய்பவர்கள் லாபவிகிதத்தைக் குறைத்து விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சேவை புரிவதால் விற்பனை இலக்கு சராசரி அளவை எட்டும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் தமக்கு எதிராக செயல்படுபவர்களை அறிந்து கொள்வது நல்லது. நீண்டகால பாக்கிப்பணம் கிடைக்க அனுகூலம் உண்டு. சலுகைகளைப் பெறுவதில் வருட முற்பகுதியில் நன்றாகவும், பிற்பகுதியில் சிரமமாகவும் இருக்கும். புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் அதிக சம்பளத்துக்கு இந்த ஆண்டு பொறுத்திருக்கத் தான் வேண்டும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடி வராத அளவிற்கு முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். சலுகைகள் பெறுவதில் குறுக்கீடு ஏற்படும். அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால், எதிர்காலத்தில் கிடைப்பதற்கு வழியுண்டு. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமையாகச் செயல்படுவர். தகுதிக்கேற்ப ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு கடும் போட்டியும், லாபக்குறைவும் இருக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினி யரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங்,விவசாய மாணவர்கள் பிற விஷயங்களில் கவனம் கொள்ளாமல் படிப்பில் மட்டும் நாட்டம் கொள்வது அவசியம். மற்ற துறை மாணவர்களும் தங்கள் நற்பெயரை தக்கவைக்க கூடுதல் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். ஆடம்பரச்செலவை குறைப்பதால் படிப்புக்கான தேவை நிறைவேறும்.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வம் வளரும். ஆதரவாளர்களை வசப்படுத்த ஏராளமாக செலவாகும். அரசு தொடர்பான பணிகள் கடும் முயற்சியின் பேரிலேயே நிறைவேறும். எதிர்ப்பாளர்களை ஒன்றுசேர விடாமல் பார்த்துக் கொள்வதால், சிரமம் அதிகரிக்காமல் தவிர்க்கலாம். சொத்து ஒன்றை குறைந்த விலைக்கு கூட்டுசேர்ந்து வாங்க அனுகூலம் உள்ளது. புத்திரர்கள் உங்கள் அரசியல் பணி சிறக்க தகுந்த ஆலோசனை சொல்வர்.
விவசாயிகள்: விவசாயம் சிறக்க தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். மகசூல் சிறந்து உபரி வருமானத்தைத் தரும். கால்நடை வளர்ப்பில் இருந்த சிரமம் மாறி வளர்ச்சிவிகிதம் கூடும். நிலம் தொடர்பான பிரச்னை தீர்வுபெற தாமதமாகும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 1,10 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் நற்பலன் ஏற்படும். பணியில் ஆர்வம் உண்டாகும். வருமானம் சிறப்பாக இருப்பதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 7, 9,11 ஆகிய ஸ்தானங்களில் விழுகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் குருவால் அனுகூலம் உண்டாகும். குருவருளால் திருமணவாழ்வு கைகூடும். மனைவி வழியில் லாபம் உண்டு. நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். பூர்விகச் சொத்தின் மூலம் வருமானம் உண்டு. தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு ஒன்பதாம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். செயல் நிறைவேற விழிப்புணர்வு மிக அவசியம். எதிரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணத்திற்காக விருப்பமில்லாமல் வெளியூர், வெளிநாடு சென்று வரும் நிர்பந்தம் உண்டாகும். மே 17ல் ரிஷபராசிக்கு வரும் குருவால், ராகு கெடுபலன் பெருமளவு குறையும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு எட்டாம் வீடான துலாமிற்குச் செல்கிறார். கேது ராசிக்கு மூன்றாம் வீட்டில் அனுகூலத்துடன் திகழ்கிறார். கையிருப்பு உயரும் வகையில் வருமானம் கூடும். எதிரியின் செயலுக்கு தக்க பதிலடி முயற்சிப்பீர்கள். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். நல்லவர்களின் நட்பால் மன ஆறுதல் உண்டாகும். ஆண்டின் இறுதியில் கேது ராசிக்கு இரண்டாம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : ராமபிரானை வழிபடுவதால் தொழில் சார்ந்த சிரமம் விலகும்.
பரிகாரப் பாடல்
மன்னு புகழ் கவுசலை தன்
மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன்முடிகள்
சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதில் புடைசூழ்
கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே!
ராகவனே! தாலேலோ!