கோவில்களில் ஆக்கிரமிப்பு: பாஸ்கர சுவாமிகள் கோரிக்கை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் தங்கதேரை இழுக்க, கோவை கந்தலோக செல்வ சுப்பிரமணிய மட பீடாதிபதி முருகனடிமை பாஸ்கர சுவாமிகள் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடந்த ஆலய தீ விபத்து, அரசுக்கும், ஆட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் உகந்தது அல்ல என்பதால், அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு யாகம் செய்துள்ளோம். இங்குள்ள, 40 கால் மண்டபத்தில் உள்ள கடைகள் பாதுகாப்பின்றி உள்ளன. கடந்த, 40 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைலாசநாதர் கோவில் கொடியேற்றம், தைப்பூச தேர் திருவிழாவை நடத்த வேண்டும். இந்து மத கோவில்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்று, அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஜனநாயக தேர்தலில் எங்கள் முடிவை தெரிவிப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.