கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு
பொள்ளாச்சி : தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி, தமிழக எல்லையான கோபாலபுரத்தில் கேரளா செக்போஸ்ட் அருகில், தமிழகத்தில் இருந்து கேரளா வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எருத்தேன்பதி ஸ்ரீ வித்யா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பூத்தட்டுக்களை ஏந்தியும், சாக்லெட் கொடுத்தும் தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை வரவேற்றனர். கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து தலைவர் தணிகாசலம் வரவேற்றார்.
அனைத்து கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்பு வழங்கியும், சந்தன பொட்டு வைத்தும் வரவேற்றனர். கேரளா போலீசார் தமிழக போலீசாருக்கு இனிப்பு வழங்கினர். சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ., அச்சுதன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.