மூணாறில்
மூணாறு : தமிழர்கள், மலையாளிகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், அனைத்து தரப்பினரும் மூணாறில், "சகோதர தீபம் ஏந்தினர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. சுற்றுலா பகுதியான மூணாறில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், கடந்த 13ம் தேதி சிலர், கேரளாவுக்கு எதிராக நடத்திய ஊர்வலம், பதட்டத்தை ஏற்படுத்தியது. அன்று முதல், நகரில் போலீசார் குவிக்கப்பட்டு, முகாமிட்டு வருகின்றனர்.
மூணாறில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களிடையே மொழி வேற்றுமை ஏற்படாமல், இரு மொழி மக்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில், நகரில்"சகோதர தீபம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று சகோதர தீபமாக, கையில் மெழுகுவர்த்தி ஏந்தினர்.