சபரிமலைக்கு பயமின்றி செல்லலாம்: ஐயப்ப சேவா சமாஜம் தகவல்
ஈரோடு: ""சபரிமலைக்கு பக்தர்கள் சுமூகமாக சென்று வரலாம், என, ஐயப்ப சேவா சமாஜம் இணை பொதுச் செயலாளர் ராஜன் கூறினார்.ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சபரிமலைக்கு செல்லும் காலங்களில், இடர்பாடுகளில் சிக்குவோருக்கு இந்த அமைப்பு உதவுகிறது. முல்லை பெரியாறு பிரச்னையால், சபரிமலை யாத்திரை பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. யாரும் போகமுடியாத நிலைமை உருவாகியது. தேனியிலேயே மாலையை கழற்றிவிட்டு, திரும்பி சென்றவர்கள் ஏராளம். அந்தளவுக்கு கலவர பூமியாக உள்ளது.இரு மாநிலத்துக்கும் நல்லுறவு ஏற்பட கேரள டி.ஜி.பி., ஜேக்கப் புன்னகோஸ், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஹேமசந்திரன், திருவனந்தபுரம் ஐ.ஜி., பத்மகுமார் ஆகியோரை சந்தித்தோம்.
ஐயப்ப பக்தர்கள் மீது நடத்த தாக்குதலை பட்டியலிட்டு கூறினோம்.அதற்கு அவர்கள், "இதுவரை, 69 வழக்குகளில், 53 பேரை பிடித்துள்ளோம். ஒட்டுமொத்த கேரள மக்களும், இம்மாதிரி இழிசெயலில் ஈடுபடவில்லை. சில சமூக விரோதிகள் குறிப்பிட்ட சில பகுதியில் இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர், என, அவர்கள் விளக்கமளித்தனர்.குமுளி, வாளையாறு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. டிச., 26ல் மட்டும் தமிழகத்தை சேர்ந்த 6,882 வாகனங்கள் சபரிமலைக்கு சென்றுள்ளன. சுற்றுலா வாகனங்கள் எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக பயணிக்கலாம்.
கேரளாவில் உள்ள ஒரு காங்கிரஸ் அமைப்பே முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம். பக்தர்களின் வருகை குறைவால் கேரள அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநில பட்ஜெட்டில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.பக்தர்கள் தங்கள் பயணத்தின்போது ஏதாவது பிரச்னைகள், இடர்பாடுகள் ஏற்பட்டால், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தை, 95856 33399, 98430 99561, 78716 71671 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார். சமாஜத்தின் மாநில இணை அமைப்பாளர் ஜெயராம், மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.