சபரிமலை நடை இன்று திறப்பு 15ம் தேதி மகரஜோதி தரிசனம்
சபரிமலை: மகரஜோதி உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை திறக்கப்படும். அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதி, மகரஜோதி தரிசனம் நடைபெறும்.கேரளா பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல உற்சவம் முடிந்து, நடை கடந்த 27ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. தொடர்ந்து, மகரஜோதி தரிசனத்திற்காக, கோவில் நடை இன்று (30ம் தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறக்கிறார்.
நடையை திறந்த பின், சிறப்பு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள் (31ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டைத் துள்ளல் நிகழ்ச்சி, ஜனவரி 12ம் தேதி நடக்கும். மகரஜோதி தரிசனம் 15ம் தேதியும் நடைபெறும். மகரஜோதி உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவுற்று, கோவில் நடை 21ம் தேதி அடைக்கப்படும்.