உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி திருவிழா: ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு வழிபாடு

ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசி திருவிழா: ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு வழிபாடு

பவானிசாகர்: தெங்குமரஹாடா வனப்பகுதியில், கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோவிலில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் வழிபட்டனர். பவானிசாகர் வனச்சரகம், தெங்கு மரஹாடா வனப்பகுதியில், கெஜஹட்டி கணவாய் மலையில், ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மாசி பவுர்ணமி நாளில், பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்த நாளில் மட்டுமே, வனப்பகுதிக்குள் செல்ல, அனுமதி வழங்கப்படுகிறது. இக்கோவில், உப்பிலிய நாயக்கர் சமூகத்தின் குலதெய்வமாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்து, அவர்கள் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்கின்றனர். நேற்று காலை, ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள், கோவில் வளாகத்தில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டிறைச்சியை எடுத்து செல்லக்கூடாது என்பதால், அங்கேயே சமைத்து, உணவுடன் பரிமாறப்பட்டது. ஈரோடு, அந்தியூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் லாரி, பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். அனைத்து வாகனங்களும், காராச்சிகொரை வனச்சாவடியில் வனத்துறையினர் சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்பட்டன. மொத்தம், 800 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன; பக்தர்கள் எண்ணிக்கை, 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !