ஸ்ரீவி., மாரியம்மன் கோயில் பூக்குழி விழா துவங்கியது
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி,நேற்று காலை கணபதி பூஜை, காப்பு கட்டுதல் முடிந்து , ரதவீதிகள் வழியாக கொடிபட்டம் கொண்டு வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், காலை 8:30 மணிக்கு, அர்ச்சகர் ஹரி கொடியேற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திரளான வெளியூர் பக்தர்களும் பங்கேற்றனர். இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருள, வீதி உலா நடந்தது.13 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், தினமும் அம்மன் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதி உலாவும் நடக்கிறது. மார்ச் 17 மதியம் 1:15 மணிக்கு பூக்குழி இறங்குதலும், மார்ச் 18 காலை 10.30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் நாகராஜன், செயல் அலுவலர் சுந்தரராஜ் மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.