நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா : 10 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கினர்
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கினர். பிப்.,19ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 17 நாட்கள் நடந்தது. மறுநாள் சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைக்கப்பட்டது. சுற்றுப்பகுதி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் சென்றார். பிப்.,26 ல் தேர் சட்டம், நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வரப்பட்டது. இரவு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி எடுத்து வரப்பட்டது.நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தனர். பகலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் கோயில் பூஜாரி பூக்குழி இறங்கியதை தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். இரவு அம்மன்குளத்தில் கம்பம் விடப்பட்டது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் நகர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.