ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ஓசூர்: தீர்த்தம் அருகே கரேசந்திரம் கிராமத்தில் நடந்த, கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலை மீது, தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தீர்த்தம் அருகே கரேசந்திரம் கிராமத்தில் ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில் விழா சிறப்பு பூஜைகளுடன் நேற்று முன்தினம் துவங்கியது. ரேவணா சித்தேஸ்வரா, தொட்டையா, சித்தைய்யா, சிடிசித்தையா, பத்தியப்பா, சாக்கியம்மா சுவாமிகள் மற்றும் மகாசக்தி உத்தம கரகம் வழிபாடு நேற்று நடந்தது. தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். குரியனப்பள்ளி, கொடிதிம்மனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சாமல்பள்ளம், மேடுப்பள்ளி, அகரம், முதுகுறுக்கி உட்பட சுற்றுவட்டார கிராம மக்களும், கர்நாடக மாநில கல்குண்டா அக்ரஹாரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.