ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில் : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரித்ததால், கோயில் ரதவீதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல தடை உள்ளதால், பக்தர்கள் ரதவீதியில் நடந்து அக்னி தீர்த்தம், கோயிலுக்கு செல்கின்றனர்.தற்போது ராமேஸ்வரத்தில் வெயில் கடுமையாக தாக்கியது. கோயில் ரதவீதியில் காலணி இன்றி நடக்கும் பக்தர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஒதுங்கி நிற்க நிழல் இன்றி தவித்தனர். சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே பக்தர்கள் நலன் கருதி ரதவீதியில் பாதுகாப்பான நிழல் குடை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.