உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா

ஊத்துக்கோட்டை பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா

ஊத்துக்கோட்டை : ராமநவமியையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஊத்துக்கோட்டை உள்ள அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், நடைபெறும் விழாக்களில் ராமநவமி முக்கியமானது. இதையொட்டி, நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், பக்தர்கள் ஒன்று கூடி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடத்தினர். தொடர்ந்து, நடனம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சாய்பாபா சன்னதியில், ராமநவமி விழா சிறப்பாக நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சாய்பாபாவிற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராமர் படம் வைத்து பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன.

பெரியபாளையம் அடுத்த, ஆரணி, ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ராம நவமி விழாவையொட்டி, சீதா, ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாலை, உற்சவர் அனுமந்த வாகனத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பெருமுடிவாக்கம் கோதண்டராம சுவாமி கோவிலில், ராம நவமியையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின், உற்சவர் கோதண்டராமர், லட்சுமணன், சீதா தேவியுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை: ராம நவமியையொட்டி, நேற்று, ஆர்.கே.பேட்டை சீதா லட்சுமணர் உடனுறை கோதண்ட ராமர் கோவிலில் சிறப்புஉற்சவம் நடந்தது. இதில், பக்தர்களின் பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. மாலை, 6;00 மணிக்கு, பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்தது. இதே போல், கட்டாரிகுப்பம் காலனியில் உள்ள கண்ணன் கோவிலிலும் நேற்று ராம நவமி உற்சவம் விமரிசையாக நடந்தது.

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் சுவாமி கோவில், நெடும்பரம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி மாத, ராமநவமி பிரம்மோற்சவ விழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. இதே போல், கே.ஜி.கண்டிகை சாய்பாபா கோவிலில், ராமநவமியையொட்டி, காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, ராமர், சீதா தேவிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், நான்கு வயது குழந்தைகள் ராமர், சீதா வேடமிட்டு, திருமண நிகழ்ச்சி நடந்தது. அதே போல், திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ராமநவமியையொட்டி, நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில், ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். - - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !