மாமல்லபுரத்தில் ராமநவமி உற்சவம்
மாமல்லபுரம்: பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உற்சவம் நடந்தது. மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதி பகுதி, பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, திருமஞ்சன வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மூலவர் ஆஞ்சநேயர், ராமநாமம் உச்சரித்தும், உற்சவ மூர்த்திகள், பட்டாபிஷேக தோற்றத்திலும் அருள்பாலிக்க, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். மாலை, பட்டாபிஷேக அலங்கார ராமர், வீதியுலா சென்றார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நாலாயிர பிரபந்த சேவை நடந்தது. செங்காடு: செங்காடு, ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்போரூர் அடுத்த, செங்காடு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும், ராம நவமி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, மூலவர் ராமனுக்கு சிறப்பு அபிஷேகம், அரச்சனைகள் நடைபெற்று, தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்களும், கிராமவாசிகளும் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். அதே போல், கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலிலும், பாபா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.