உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெயிலில் காயும் பக்தர்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெயிலில் காயும் பக்தர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்குமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்தாண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகூர்த்தம், அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மூலவர் சன்னிதியில் இருந்து மூன்றாவது பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரிசையில் நிற்குமிடத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில், கூரை வசதி ஏற்படுத்தப்படவில்லை. மூன்றாம் பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், தரையில் உள்ள சூடு காரணமாகவும், சுட்டரெிக்கும் வெயில் காரணமாக பக்தர்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்குமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !