ராமசந்திர பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே, ராமசந்திர பெருமாள் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் கிராமத்தில், சீதா சமேத ராமசந்திர பெருமாள் கோவில் உள்ளது. இவர்களுடன் லட்சுமணன், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றனர். கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை மூலவர் ராமசந்திர பெருமாளுக்கு சிறப்பு அபி ?ஷக, ஆராதனை தீபாராதனை நடந்தது. மேலும், உற்சவ மூர்த்திகள் லட்சுமணர், அனுமந்தன், சீதா சமேத ராமசந்திர பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடந்தது. காலை, 8:00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, பிரம்மோற்சவ விழா கொடியை பட்டாச்சாரியர்கள் ஏற்றினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். வரும், 29ல், இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 11:00 மணிக்கு கருட சேவை உற்சவம், 31 காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏப்.2ல், காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரி, இரவு, 8:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.