பழநி முருகன் உற்சவர் சிலை செய்ததில் மோசடி எப்படி?
பழநி: பழநி முருகன் கோவிலுக்கு, 200 கிலோ எடையுடைய, புதிய உற்சவர் சிலை செய்ததில்,முத்தையா ஸ்பதியுடன் சேர்ந்து, 1.31 கோடி ரூபாய் சுருட்டியது எப்படி என, வழக்கில் கைதாகி உள்ள, தமிழக அமைச்சரின் உறவினர், போலீசாரிடம், பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்,கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், முத்தையா,77. ஹிந்து சமய அறநிலையத் துறையில், பிரதான ஸ்தபதியாக பணியாற்றினார்.
ரூ.60 கோடி ஒதுக்கீடு: இவரும், தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரான, கோவை, நஞ்சுண்டபுரம், எஸ்.என்.வி., கார்டனைச் சேர்ந்த, கே.கே.ராஜா, 66, என்பவரும், பழனி முருகன் கோவிலுக்கு, உற்சவர் சிலை செய்ததில், 1.31 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.போலீசாரிடம், கே.கே.ராஜா அளித்துள்ள வாக்குமூலம்: திண்டுக்கல் மாவட்டம்,பழநி முருகன் கோவிலில், 2003 - 04ல், அறநிலைய துறையின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றினேன்.
மூலவர் சிலை: சேதமடைந்ததால், அதன் அருகே, 200 கிலோ எடையில், உற்சவர் சிலை செய்து வைப்பது என, முடிவானது. அதற்காக, கோவில் நிதியில் இருந்து, 60 கோடியே, 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தோம்.இப்பொறுப்பை, காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில்,ஸ்வர்ணம் சிற்பக்கலைக் கூடம் நடத்தி வரும், ஸ்தபதி முத்தையாவிடம் ஒப்படைத்தோம். அவர் கற்சிலை மட்டுமே செய்ய தெரிந்தவர் என்பதால், பஞ்சலோக சிலை செய்யும் ஸ்தபதி ஒருவர் வாயிலாக, சிலையை செய்தார். ஆனால், அந்த சிலையில், வெள்ளி பயன்படுத்தப்படவே இல்லை.தங்கம் உட்பட, நான்கு உலோகங்களை மட்டுமே பயன்படுத்தினோம். சிலை செய்ய, திருத்தணிமுருகன் கோவிலில் இருந்து, 10 கிலோ தங்கம் கடனாக வாங்கப்பட்டது.
சிலையில் திருத்தம்: ஸ்தபதி முத்தையாவுடன் சேர்ந்து, 22 கிலோ செம்பு உள்ளிட்ட உலோகங்களை அதிகமாக சேர்த்து, 221 கிலோவில் சிலை செய்தோம். சிலைக்கு பயன்படுத்த வேண்டிய, 4.2 கிலோ தங்கத்தை சுருட்டினோம். அதன் அப்போதைய மதிப்பு, 24 லட்சம் ரூபாய்.ஆறு மாதத்தில், சிலையின் முகம், கை உள்ளிட்ட பாகங்கள்கறுத்து விட்டன. இதனால், சிலையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என, ஒரு அறையில் பூட்டி வைத்தோம்.அந்த சிலையை, 2004ல் இருந்து, தற்போது வரை, 14 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை. சிலை செய்ய, ஒதுக்கிய நிதி மற்றும் வட்டியுடன் சேர்த்து, 1.31 கோடி ரூபாய் சுருட்டியதாக, எங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பார்த்து செய்யுங்க!: சிலை மோசடி புகாரில் கைதாகி உள்ள, கே.கே.ராஜா, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்துள்ளார். அவருக்கு, ஊட்டியில் சொந்தமாக, எஸ்டேட் உள்ளது. தமிழக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான இவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நெருங்கியதும், ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு, பல இடங்களிலும் இருந்து, அழுத்தம் வந்துள்ளது.அவர் கூறுகையில், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், பார்த்து செய்யுங்க என்றனர். வழக்கின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றேன். இந்த வழக்கில், மேலும், ஏழு முக்கிய புள்ளிகளை கைது செய்ய உள்ளோம், என்றார்.- நமது நிருபர் -