காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா விமரிசை
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் கோவிலில், 63 நாயன்மார்கள் உற்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோவில் என, அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், ஆண்டு தோறும், பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், மார்ச் 21ல், கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில், பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ஆறாம் நாளான நேற்று, 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. இதில், காலை, 10:30 மணிக்கு, மலர் அலங்கார சப்பரங்களில் ஏலவார்குழலியுடன், ஏகாம்பரநாதர், சண்டிகேஸ்வரர், விநாயக பெருமான், முருகன் என, பஞ்சமூர்த்திகளுடன், 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நான்கு ராஜவீதிகளில், திருவீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். முன்னதாக, காலை, 9:00 மணியில் இருந்தே, கோவிலுக்கு பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கோவிலில் கூட்டம் அலைமோதியது. ஏழாம் நாள், பிரபல உற்சவமான, தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
வாண வேடிக்கை: சுவாமி ஊர்வலத்திற்கு முன் நாதஸ்வரம் மற்றும் பேண்டு வாத்திய கலைஞர்கள் இசைக்கருவியை இசைத்தபடி சென்றனர். காஞ்சிபுரத்தில் நேற்று, 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவிய போதும், ராஜ வீதிகளில், வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று கொளுத்திய வெயிலால், தரையில் உள்ள சூடு, பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்காமல் இருக்க, காஞ்சிபுரம் நகராட்சி சார்பில், லாரிகளில் தண்ணீர் தரையில் தெளித்தபடியே சென்றனர். நேர்த்திக்கடனாக சில இடங்களில், பக்தர்களுக்கு புளியோதரை, வெண் பொங்கல், குளிர்ந்த நீர்மோர் வழங்கப்பட்டது ராஜ வீதிகளில் சுவாமி வீதியுலா சென்ற போது, தொலைவில் உள்ள பக்தர்களின் வசதிக்காக, ஒவ்வொரு இடத்தைவிட்டு சுவாமி புறப்படும் போது, வாண வேடிக்கை நடந்தது. பெரும்பாலான பக்தர்கள், தங்களது மொபைல்போனில், சுவாமியை போட்டோ மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.