உத்தரவு இட்டதற்கு நன்றி
ஜார்ஜ் முல்லர் என்னும் ஆங்கிலேயர் யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை. அவரின் பிரார்த்தனையால் பலன் அடைந்தவர்கள், தேடி வந்து பணம் கொடுப்பது வழக்கம். இவரை போல நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகம் தான். கையில் பணம் இல்லாத நேரத்தில், அனாதை சிறுவர்களுக்கு விருந்தளிக்க விரும்பிய அவர், கடவுளிடம் பிரார்த்தனை மட்டும் செய்தார். விடுதியின் பொறுப்பாளரை அழைத்து, விருந்துக்கு தயாராக இருக்கும்படி கூறினார். இதை அறிந்த குழந்தைகள் ஆசையுடன் காத்திருந்தனர். மேஜையில் தட்டு, கரண்டி எடுத்து வைக்கப்பட்டன. அவரவர் இடத்தில் தண்ணீரும் வைக்கப்பட்டது. பொறுப்பாளர், “முல்லருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் பிள்ளைகள் அமர்ந்தால் ஏமாந்து போவார்களே!” என்று எண்ணி கொண்டார்.
நேரம் கடந்ததால் பொறுப்பாளர், “ சாப்பாடு இல்லாமல் என்ன செய்வது?” என்றார். “கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. சாப்பாட்டு மணியை அடியுங்கள்” என்றார். அப்படியே மணி ஒலிக்க, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்தனர். மனஒருமையுடன் முல்லர் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது அங்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவு இருந்தது. அதில் வந்த டிரைவர் முல்லரிடம், “ஐயா! எங்கள் முதலாளி இந்த உணவை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்” என்றார். நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தால் விருந்து தடைபட்டதால், ஆதரவற்ற சிறுவர்களுக்கு வழங்க முடிவெடுத்தார். “பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால் நமக்கு விருந்து கிடைத்துள்ளது. நன்றி சொல்லி உண்போம்” என மகிழ்ந்தார் ஜார்ஜ் முல்லர்.