ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், பங்குனி விழா, வழக்கமான உற்சாகத்துடன், விமர்சையாக நடந்து வருகிறது.
மூன்று கோவில்களிலும் கம்பத்துக்கு, நாள்தோறும் பக்தர்கள், தீர்த்தம் ஊற்றி வழிபடுகின்றனர். சுமை தூக்குவோர் சங்கம், நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்கம், நேதாஜி தினசரி மார்கெட் கனி வியாபாரிகள் சங்கம், கனிமார்கெட் ஜவுளி வியாபாரிகள், கே.என்.கே., ரோடு பகுதி மக்கள், கோட்டை பகுதி மக்கள் என, ஆயிரக்கணக்கானோர், காவிரிக்கரையில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து, நேற்று ஊர்வலமாக வந்தனர். கோரிக்கை மற்றும் வேண்டுதல் வைத்த பக்தர்கள், பறவைக்காவடி அலகு, வேல் அலகு, நாவலகு, மயில் அலகு, முதுகு அலகு என அலகு குத்தி வந்தனர். பெண்கள், சிறுவர், சிறுமியர் அக்னிச்சட்டி ஏந்தி, ஆக்ரோஷமாக ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். காவிரி ஆற்றங்கரையில் தொடங்கிய ஊர்வலம், கருங்கல்பாளையம், ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, கனி மார்கெட், பி.எஸ்., பார்க் வழியாக கோவிலில் முடிந்தது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.