உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

திருப்பரங்குன்றம் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர், திருமணக் கோலத்தில், மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோவிலில் இருந்து புறப்பாடகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சொக்கநாதர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணிய சுவாமி வரவேற்றபின், கோவில் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருக்கல்யாண உற்ஸவம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் முடிந்து, திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் மண்டபம் வந்தனர். பின் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். கண்ணுாஞ்சல் முடிந்து ஆறுகால் பீடத்தில் பிரியாவிடை, சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன்,தொடர்ந்து சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். மாங்கல்ய பூஜைக்குப்பின், சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. சிவாச்சார்யார் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் செய்தனர். சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு பச்சைபட்டு சாத்துப்படியானது.மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரிவியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு, சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர்.

குன்றத்து கோயிலுக்கு திருக்கல்யாண சீர்வரிசை: திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த திருக்கல்யாணத்திற்கு சோலைமலை முருகன் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. பட்டுப் புடவைகள்,வேஷ்டிகள்,வளையல்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தேங்காய் உட்பட பல்வேறு மங்கலபொருட்களை மணமக்களுக்கு சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !