கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்
திருப்பூர்: பிரசித்தி பெற்ற, பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் இன்று (ஏப்.,3) லட்சக்கணக்கான பக்தர்கள்குண்டம் இறக்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், பிரசித்த பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் காவல் தெய்வமாக, பக்தர்கள் வழிபடப்படும் இக்கோவிலில், அமாவாசை, வெள்ளிக்கிழமை, விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசித்து செல்வர். ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை, கோவிலில் குண்டம் திருவிழா நடக்கும். சகுனம் கேட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்நிகழ்வில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர்.
நடப்பு ஆண்டு குண்டம் திருவிழாவுக்கான ஆயக்கால் நடுதல், தேர் முகூர்த்தத்துடன் கடந்த 23ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, 28ல் கொடியேற்றம்; ஏப்ரல், 1ல் பொங்கல் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று (ஏப்., 3ம் தேதி) நடைபெற்றுவருகிறது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறக்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.