வராரு... வராரு... கள்ளழகர் வராரு...: வரவேற்க காத்திருக்கும் அலங்கார ஆடைகள்
மதுரை:கள்ளழகரு கிளம்பீட்டாரு கல்யாணம் பார்க்க... பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி... கிளம்புறாரு, வரமெல்லாம் வாரி, வாரி வழங்குறாரு, வராரு... வராறு... கள்ளழகர் வராரு... என ஆடல், பாடலுடன் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க மதுரை வரும் கள்ளழகரை வரவேற்கும் சித்திரை திருவிழா களைகட்ட துவங்கியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோயிலை சுற்றியுள்ள கடைகளில் திருவிழாவிற்கு தேவையான பொருட்களை வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதுமண்டபத்திற்குள் கடைகளுக்கு அனுமதி இல்லாததால் மண்டபத்திற்கு வெளியில், வியாபாரிகள் ஆன்மிக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புது மண்டபம் பகுதியில் சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் உடைகள் உட்பட பல்வேறு பொருட்கள் தீவிரமாக தயாராகின்றன.
கருப்பர் பரிவட்டம்: கருப்பசாமி ஆடை அணிந்தவரின் தோற்றத்தை மாற்றும் பங்கு பரிவட்டங்களுக்கு அதிகம் உண்டு. அதை தலையில் வைக்கும் போது கருப்பனின் அவதாரமாகவே மாறிவிடுவது போல தோன்றும். கருப்பு, சிவப்பு, கொண்டை வைத்தது என விதவிதமான பரிவட்டங்கள் கிடைக்கிறது.
தீப்பந்த திரி: சித்திரை திருவிழா காலங்களில் நகரில் தீப்பந்தம் ஏந்திய பக்தர்கள் வலம் வருவது வழக்கம். பெரியவர்களுடன், சிறுவர்களும் தீப்பந்தம் ஏந்துவர். அவர்களுக்காக மஞ்சள் துணி சுற்றிய தீப்பந்த திரிகள் தயாராக உள்ளன. எரியும் இந்த திரியில் இருந்து சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்து இறையருள் தரும் பக்தர்களை பார்த்தாலே பரவசம் தான்.
கோயில் குடை: கோடை வெயிலில் பக்தர்களை காண வரும் சுவாமிக்கு நிழல் தரும் அலங்கார குடைகள் கண்களை கவர்கின்றன. சிறிய, பெரிய குடைகள் என தேவையான அளவிற்கு ஆர்டர் கொடுத்தால் வியாபாரிகள் தயாரித்து தருகின்றனர். மண்டகப்படி, சுவாமி தேர்களில் தொங்கவிடும் தொம்பை அலங்கார துணிகள் நம்மை போல சுவாமியை பார்க்க கடைகளில் தவம் கிடக்கின்றன.
சாட்டை கயிறு: கையில் சாட்டையுடன் வலம் வரும் கருப்பனை நம் கண்முன்னே கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பார்த்தாலே மிரட்டும் சாட்டை கயிறுகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். புளிச்ச நார் மற்றும் கற்றாழை நாரில் பின்னப்பட்ட சாட்டைகளுடன் வண்ண நுால் சாட்டையும் கிடைக்கிறது.
கருப்பசாமி ஆடை: கருப்பசாமி வேடம் அணிந்து கள்ளழகரை வரவேற்கும் பக்தர்களுக்காக பருத்தி, பட்டுத் துணியில் தைக்கப்பட்ட வண்ண ஆடைகள் பல மாடல்களில் கிடைக்கிறது. வேண்டுதலுக்காக தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அணியும் ஆடைகளையும் விரும்பும் சைஸ்களில் வாங்கலாம்.
ஆன்மிக பணி: இந்தாண்டு புது மண்டபத்திற்குள் கடை வைக்க முடியாததால் வருத்தம் உள்ளது. இருந்தாலும் ஆன்மிக பணியை விட்டு விலக கூடாது என்ற கொள்கையுடன் ரோட்டோரத்தில் கடை நடத்தி வியாபாரம் செய்கிறேன். புது மண்டபம் மூடி கிடக்கிறது என்று நினைக்க வேண்டாம். மண்டப வளாகத்தில் என்னை போல ஒரு சிலர் கடைகளை நடத்துகிறார்கள்.- எஸ்.அமீர்ஜான்
திருவிழா பெருவிழா: மதுரை மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மறக்க முடியாத விழா. இந்த விழாவை சிறப்பிக்க தேவையான அலங்கார குடைகள் உள்ளிட்ட பொருட்களை பார்த்து, பார்த்து தயாரித்து வருகிறோம். பக்தர்களும் ஆர்வத்துடன் வந்து மனதிற்கு பிடித்தவைகளை வாங்கி
செல்கின்றனர்.- ஜி. சீனிவாசன்
தெய்வீக அலங்காரம்: புது மண்டபம் மூடப்பட்டதால் வீட்டில் வைத்து சுவாமி ஆடைகளை தைத்து இங்கு விற்கிறேன். எங்களுக்கு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையுடன் மீனாட்சி அம்மனையும், அழகரையும் வரவேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை தெய்வீக தன்மை குறையாமல் தயாரித்து வழங்குகிறேன்.- கே.சசிக்குமார்