உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் அம்பாள் திருக்கல்யாண விழா கோலாகலம்!

நெல்லையப்பர் கோயிலில் அம்பாள் திருக்கல்யாண விழா கோலாகலம்!

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் உள்ள மனோன்மணியம் அம்பாள் திருக்கல்யாண விழா நேற்று கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரைத் திருவிழாவின் ஆறாவது திருநாளில் நடக்கும் வேணுவனநாதர், மனோன்மணியம் அம்பாள் திருக்கல்யாண விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அற்புத நிகழ்ச்சி.மனோன்மணியம் அம்பாளை திருக்கல்யாணக் கோலத்தில் தரிசித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் நெல்லையப்பரின் அருகே சக்தி வடிவமாய் வீற்றிருக்கும் மகாசக்தி வாய்ந்த மனோன்மணியம் அம்பாள் திருக்கல்யாண நாளில் மட்டும் வெளியே வந்து விழாவிற்கு பின் மூலவரிடமே திரும்பிச் செல்வது வழக்கம்.நெல்லையப்பர் கோயிலில் கடந்த டிசம்பர் 30ம்தேதி மார்கழி திருவாதிரைத்திருவிழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. ஆறாம் திருநாளான நேற்று மாலை சுவாமி கோயில் மகா மண்டபத்தின் நந்தி மண்டபத்தில் வேணுவனநாதர், மனோன்மணியம் அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாண விழா நடந்தது. இதில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, மனோண்மணியம் அம்பாளை தரிசனம் செய்தனர். திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.வரும் 7ம்தேதி இரவு சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தில் தாமிரசபையில் நடராஜபெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 8ம்தேதி அதிகாலை 4.15 மணிக்கு பசு தீபாராதனையும், தாமிரசபையில் காலை 4.50 மணி முதல் 5.20 மணி வரை நடராஜர் திருநடனக்காட்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !