உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜேந்திர சோழன் கட்டிய பர்வதீஸ்வரர் கோவில் சிதிலம்

ராஜேந்திர சோழன் கட்டிய பர்வதீஸ்வரர் கோவில் சிதிலம்

பொன்னேரி: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பர்வதீஸ்வரர் கோவில், சிதிலமடைந்து கிடக்கிறது. கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்குவது எப்போது என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில், காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், 1116ம் ஆண்டு, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்வெட்டு: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம் குறித்த தகவல்கள், திருப்பாலீஸ்வர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்கள் கட்டட கலையை உணர்த்தும் வகையில், பர்வதீஸ்வரர் சன்னதியின் கருவறை  கஜபிருஷடம் (யானையின் பின்புறம்) வடிவில் உள்ளது. கருங்கல் மற்றும் செங்கற்களை கொண்டு கட்டடம் அமைக்கப்பட்டது. அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. விஜயநகர அரசர், காகதீய அரசன், குலோத்துங்க சோழன், கிருஷ்தேவராயர், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அரசர்களால் கோவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இத்திருத்தலம் தற்போது, சிதிலமடைந்து கிடக்கிறது. கோவில் சுவர்களின் செங்கற்கள் கரைந்து, செடிகள் வளர்ந்தும் உள்ளன. 40 ஆண்டுகளாக, கோவிலில் எவ்வித உற்சவங்களும் நடைபெறாமல் உள்ளன. பர்வதீஸ்வர், காமாட்சியம்மன் சன்னதிகளில், துாண்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. கோவில் இடிந்து விழுந்தால், ஊருக்கு நல்லதல்ல என்பதால், கிராமமக்கள் பதற்றத்தில் உள்ளனர். அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள், பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். ஆனால், அது தொடர்பாக நடவடிக்கை இன்றி கிடக்கிறது.

வேதனை: இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த, 40 ஆண்டுகளாக, இக்கோவிலில் எவ்வித உற்சவங்களும் நடைபெறாமல் இருப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது.  ஆறு மாதங்களுக்கு முன், அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டு, கோவிலில் உடனடியாக, திருப்பணிகள் துவங்கப்படும் என, தெரிவித்தனர். ஆனால், எவ்வித பணிகளும் இதுவரை துவங்கப்படவில்லை. கிராமத்தின் சார்பிலும் குறிப்பிட்ட தொகையை கோவில் திருப்பணிகளுக்கு வழங்க தயாராக உள்ளோம். மிகவும் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தை புனரமைக்கும் பணிகளை, உடனடியாக துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !