உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாதயாத்திரை பக்தர்களே நான்கு வழிச்சாலையில் கவனம்!

பழநி பாதயாத்திரை பக்தர்களே நான்கு வழிச்சாலையில் கவனம்!

தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்லத்துவங்கி விட்டனர். மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, பாதயாத்திரை செல்பவர்கள் பெரும்பாலும் நான்குவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்லும். இரவில் பக்தர்கள் நடந்து செல்வதே, வாகன வெளிச்சத்தால், டிரைவர்களுக்கு தெரியாது. எனவே பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வது அவசியம். இது குறித்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தரும் "டிப்ஸ்...

*நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் வரும் திசைக்கு நேர் எதிராக, வலது ஓரமாக செல்ல வேண்டும்.
*இரவு நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
*சாலையில் பாதசாரிகளுக்கான வழித்தடம் இருந்தால், அதன் வழியாக தான் செல்ல வேண்டும்.
*சாலையை அடைத்தபடி கூட்டமாக செல்லக்கூடாது. சாலையோரம் இடைவெளி விட்டு வரிசையாக செல்வது பாதுகாப்பானது.
*சாலையோரம் அமர்ந்து உணவருந்துவது, ஓய்வெடுப்பது கூடாது.
*யாத்திரையின் போது சாலையின் குறுக்கே செல்வது ஆபத்து.
*பாலத்தின் கைப்பிடி சுவற்றில் உட்காரக்கூடாது. பாலத்தின் நடை பாதையில் ஓய்வு எடுக்கக்கூடாது.
*ஆற்றில், குளங்களில் குளிக்கும்போது கவனம் தேவை.
*ஆடைகளை உயரத் தூக்கிப்பிடித்து கொண்டு செல்லக்கூடாது.
*அவசர போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் போன் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டின் பரிதாப பலி: பாதயாத்திரை பக்தர்கள் ஆண்டுதோறும் விபத்தில் பலியாவது தொடர்கதையாக உள்ளது. இந்த ஆண்டு தைப்பூச "சீசன் துவக்கத்திலேயே (ஜன., 5 காலை 11.30 மணி), மதுரை செல்லூர் 60 அடி ரோட்டை சேர்ந்த பாலமுருகன், 30, பலியானார். வாடிப்பட்டி- கொடைரோடு இடையே சென்றபோது, பின்னால் வந்த மினிலாரி இவர் மீது மோதியதில், அதே இடத்தில் இறந்தார்.

தனி நடைபாதை எப்போது:ரோட்டோரம் முள், கற்களை தவிர்க்க, பக்தர்கள் நடுரோட்டில் நடக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில், பக்தர்களுக்கான "தனி நடைபாதை திட்டம் பரிசீலனையில் உள்ளது. தற்காலிகமாக, திண்டுக்கல்- பழநி வரை, நான்கு அடிக்கு ரோடு அகலப்படுத்தப்பட்டது. இதற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட போதும், பல இடங்களில் தார் மட்டும் பூசி மெழுகினர். பராமரிப்பு இல்லாததால், ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி (திண்டுக்கல் ரோடு); நீலமலைக்கோட்டை, ஸ்ரீராமபுரம், தருமத்துப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், காமலாபுரம் (மதுரை ரோடு); காரமடை, க.வேலூர், கரடிக்கூட்டம், ஆர்.வாடிப்பட்டி, சின்னாக்கவுண்டன் புதூர் (உடுமலை ரோடு) ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் நடப்பது சிரமம். இவற்றை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !