சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடந்தது. "கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட, லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து பக்தி பரவசமடைந்தனர். பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா, நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு நடந்தது.காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்ற நம்பெருமாள், நேற்று நள்ளிரவு, 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், அதிகாலை, 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்ட நவதிருப்பதிகளில், நேற்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.இம்மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (இரு கோவில்கள்), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய ஒன்பது பெருமாள் கோவில்கள் நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இக்கோவில்களில் சுவாமி - தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பின்னர், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது.
ஆதி திருவரங்கம்:அரங்கநாதராக பள்ளி கொண்டுள்ள ஆதி திருவரங்கத்தில் அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி - பூதேவி சமேத அரங்கநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வைகுண்ட வாசல் வழியாக சொர்க்கவாசல் மண்டபத்தை வந்தடைந்தார். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில், ராப்பத்து திருவிழா நேற்று துவங்கியது. விழாவில், முதல் நாளில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 7.35 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.மூலஸ்தானத்திலிருந்து பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக வீதிகளில் எழுந்தருளி, ராப்பத்து மண்டபம் சேர்ந்தார்.இதன் பின், திருவாய்மொழி துவக்கம், அரையர் வியாக்கியானம், மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, மீண்டும் மூலஸ்தானம் வந்தடைதல் நடந்தது.
குப்பைக்கு தங்கம் பரிசு:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், திருச்சி மாநகராட்சி மற்றும் திருச்சி, புதுகை பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்கக்காசு பரிசாக அறிவிக்கப்பட்டது.குப்பை கொடுப்பவர்களுக்கு துணிப்பையும், கூப்பனும் வழங்கப்பட்டது. நேற்று நடந்த குலுக்கலில், ஐந்து பேருக்கு தலா ஒரு கிராம் தங்கக்காசும், 21 பேருக்கு தலா ஒரு கிராம் வெள்ளிக்காசும், ஆறுதல் பரிசாக 40 பேருக்கு எல்.இ.டி., பல்புகளும் வழங்கப்பட்டன.