உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருதுநகர்: விருதுநகர் மாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 1 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது.

தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளில் எழுந்தருளி, வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன் தினம் நடந்தது. அன்று இரவு முதல் நேற்று வரை அம்மனுக்கு பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி, கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், பல்வேறு வேடங்கள் போட்டப்படி நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளில் முக்கியமானது அக்னி சட்டி எடுப்பது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டிகள் ஏந்தியும், பறவை காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர், மதுரை, சிவகாசி என பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை, வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள விருதுநகர் பக்தர்கள், உறவினர்களோடு கோயில் விழாவை கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !