தளவாபாளையம் மாரியம்மன் கோவில் பங்குனி விழா
கரூர்: தளவாபாளையம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், பூக்குழி இறங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் அடுத்த, தளவாபாளையம் மாரியம்மன் கோவில், பங்குனி மாத திருவிழா, கடந்த, 1ல், காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட கம்பம் நட்டு துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், வடிசோறு வைத்து அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, பூக்குழி இறங்குதல், நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது. அம்மன் அலங்காரத்துடன், கோவிலைச் சுற்றி பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கோவில் முன், 30 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, 11ல் கம்பம் எடுத்து காவிரி ஆற்றில் விடுதல், 12ல் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.