சேலம் கோவில் யானை கருணை கொலைக்கு மாலைக்குள் அறிக்கை
சேலம்: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சேலம் கோவில் யானையை, கருணை கொலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதால், மக்கள், கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல்கின்றனர்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை, ராஜேஸ்வரி, 42, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள் தொடர்ந்து, சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் இல்லாததால், கருணை கொலை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, பள்ளி மாணவ - மாணவியர், மக்கள், கூட்டம் கூட்டமாக, யானையை பார்த்துச் செல்கின்றனர்.நீதிமன்ற உத்தரவுப்படி, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரசுக்கு, இன்று மாலைக்குள், அறிக்கை அனுப்புவர். அது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால், கருணை கொலை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்.செயல் அலுவலர் தமிழரசு கூறுகையில், கோவிலில், 38 ஆண்டுகளாக ராஜேஸ்வரி இருந்தது. அனைவரிடமும் மிக அன்பாக பழகும். தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, கருணை கொலை வரை சென்றது வருத்தமளிக்கிறது, என்றார்.