உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளுத்தும் வெயிலிலும் குதிரை திருவிழா: அவிநாசியில் பக்தர்கள் பரவசம்

கொளுத்தும் வெயிலிலும் குதிரை திருவிழா: அவிநாசியில் பக்தர்கள் பரவசம்

அவிநாசி : கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 6 கி.மீ., துாரம், இளைஞர்கள், நேர்த்திக்கடன் செலுத்த குதிரைகளை சுமந்து சென்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை, அவிநாசி அருகே உள்ள ராயம்பளையத்திலிருந்து அப்பகுதி மக்கள், ஆகாசராயர் கோவிலுக்கு குதிரை சிலை அலங்கரித்து, சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழிபடுவர். நடப்பாண்டு, குதிரை சுமக்கும் திருவிழா, நேற்று நடந்தது. ராயம்பாளையத்தில் இருந்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குதிரைகளை, கொளுத்தும் வெயிலில், இளைஞர்கள் தோளில் சுமந்தபடி, முக்கிய பகுதிகள் வழியாக, ஆகாசராயர் கோவிலுக்கு சென்றனர். குதிரை சென்ற வழி நெடுகிலும், ெபாதுமக்கள் நீர் மோர் வழங்கினர். ஆகாசராயர் கோவிலில் குதிரைகளை வரிசையாக வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !