பழங்குடியினரின் விஷூ பண்டிகை திருவிழா :ஒன்பது நாட்கள் விரதமிருந்து கிராமத்தில் தூய்மை பணி
பந்தலுார்:பந்தலுார் அருகே பழங்குடியின கிராமத்தில், விஷூ பண்டிகையை முன்னிட்டு, ஒன்பது நாள் விரதமிருந்து, கிராமத்தை துாய்மை செய்யும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மலையாள மொழி பேசும் இந்துக்கள் மற்றும் பழங்குடியினர்கள் மத்தியில் விஷூ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து, பொன்னானி மகா விஷ்ணு கோவில், எருமாடு மற்றும் வெள்ளேரி சிவன்கோவில், பெரும்பள்ளி பாலபரமேஸ்வரி, பந்தலுார் பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அம்சமாக, கூவமூலா குரும்பர் பழங்குடியின கிராமத்தில் விஷூ பண்டிகையை திருவிழா நடத்தப்பட்டது. அதில், பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் பொருட்கள் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டன. அங்கு பூஜைகள் செய்த பின்னர், அனைவரும் இணைந்து உணவு தயார் செய்தனர். பின்னர் மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பழங்குடியினரின் கலாசார நடனம் நடத்தப்பட்டது.
பின்னர், அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மஞ்சள் கலந்த அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பூஜைக்காக கிராம மக்கள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து, கிராமத்தை துாய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில், பெண்களும் சாமியாடி அருள்வாக்கு கூறினர். பின்னர், பகவானுக்கு படையல் போட்டவுடன், கிராமத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம தலைவர் மாறன் தலைமையில், பொம்மன், கிரிமாறன் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.