செப்பறை, நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!
திருநெல்வேலி :நெல்லையப்பர், செப்பறை அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருநாள் கடந்த டிச.30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் காலையில் திருவெம்பாவை வழிபாடு நடந்துவருகிறது. மாலையில் நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 4ம் திருநாளில் இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷிப வாகனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடந்தது. 6ம் திருநாளில் வேணுவனநாதர்-மனோன்மணியம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு கோயில் 2வது பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நேற்று முன்தினம் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. நேற்று அதிகாலையில் கோ பூஜை, பசு தீபாராதனையும், அதன்பின் தாமிர சபையில் நடராஜர் திருநடன காட்சியும், நடன தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவாதிரை களி, தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கணபதிமுருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
செப்பறை : ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் கடந்த டிச.30ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜைகளும், திருவெம்பாவை வழிபாடும் நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. திருவாதிரையை முன்னிட்டு நேற்று காலை பசு தீபாராதனை, ஆருத்ரா தரிசனமும், தொடர்ந்து தாண்டவ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. இரவு அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் சுப்புலெட்சுமி மற்றும் கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடராஜர், சிவகாமிஅம்பாளுக்கு திருவாதிரை விழா நடந்தது. காலையில் பசு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா நடந்தது. கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு காலையில் பசு தீபாராதனை, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கணேசன் பட்டர் செய்திருந்தார்.