கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் வரதராஜ பெருமாள் கோவில்
பெருநகர்: பெருநகர், வரதராஜ பெருமாள் கோவிலில், 27ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்கான, திருப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில், அறநிலையத் துறைக்கு சொந்தமான, பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஆண்டுகளில், இக்கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே உதிர்ந்தன. மேலும், கோபுர பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டு, பலவீனமாக இருந்தது. இவற்றை சீரமைக்க, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இருப்பினும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கிராம மக்கள், நன்கொடை வசூலித்து, சில நாட்களாக கோவில் புனரமைப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். தற்போது, சீரமைப்பு பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரும், 27ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்கின்றனர்.