கந்தகோட்டத்தில் நவகலச மஹா அபிஷேகம்
சென்னை: சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவிலில், உலக நன்மைக்காக, சுப்ரமணிய மஹா ஹோமத்தின் நிறைவு பகுதியாக, நவகலச மகா அபிஷேகம் நடந்தது. சென்னை, பூங்காநகர், ராசப்ப செட்டி தெருவில் அமைந்துள்ளது கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில். இக்கோவிலில், உலக நன்மைக்காக, சுப்ரமணிய ஹோமம் நடத்தப்பட்டது.இதை முன்னிட்டு, ஏப்., 19ம் தேதி முதல், யாகசாலை வளர்க்கப்பட்டு, மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. விழாவின் முக்கிய நாளான நேற்று, காலை, 10:30 மணிக்கு, மஹா அபிஷேகமும், மஹா பூர்ணாஹுதியும் நடந்தது. நண்பகல், 12:00 மணிக்கு, கலச பூஜை புறப்பாடு, நவகலச மஹா அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானின் அருளைப் பெற்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு, முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், உற்சவர் பாலசுப்பிரமணியர், வெள்ளி மயில் வாகனத்தில் சிறிய மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.