உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின், பிரதான தேர்த்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, 20ல், கொடியேற்றத்துடன் துவங்கி, வேதகிரீஸ்வரர் சுவாமி, விதவிதமான வாகனங்களில் தினமும் திருவீதி வலம் வருகிறார். ஆறாம் நாள் விழாவான நேற்று காலை, 8:00 மணிக்கு அவர், விமானம் வாகனத்திலும், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அவரவர் வாகனத்திலும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, யானை வாகனத்தில், பஞ்சமூர்த்திகளின் வீதி உலாவும் நடந்தது.

பிரதான, ஏழாம் நாள் திருவிழாவான இன்று, தேர் திருவிழா நடைபெற்றது. மாவட்டத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், தனிச்சிறப்பாக ஐந்து ரதங்களில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. பெரிய தேரான வேதகிரீஸ்வரர், பிற நான்கு தேர்களான திரிபுர சுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் வலம் வந்தன. விழாவை ஒட்டி, காலை, 5:30 மணிக்கு, சுவாமியருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது . பின் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களும் புறப்பட்டு, மாட வீதிகளில் வலம் வந்து, பகல், 1:00 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !