உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி கோவில் ஆவணங்கள் எரிக்க முயற்சி?

பார்த்தசாரதி கோவில் ஆவணங்கள் எரிக்க முயற்சி?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆவணங்களை, எரிக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக, உரிய பதிலளிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினரிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில்களில் உள்ள தேவையற்ற ரசீதுகளை, ஆண்டிற்கு ஒரு முறை, உரிய அனுமதியுடன் எரிப்பது வழக்கம். அதன் படி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சார்பில், பழைய ரசீதுகளை, அந்த கோவிலுக்கு சொந்தமான, ஈக்காடுதாங்கலில் உள்ள மண்டபத்தில், சில மாதங்களுக்கு முன், கோவில் நிர்வாகத்தினர் எரிக்க முயன்றனர்.அப்போது, வழக்கத்திற்கு மாறாக, ஏராளமான ஆவணங்களையும் எரிக்க முயன்றாக கூறப்படுகிறது.

ஆவணங்களை பார்த்து சந்தேகமடைந்த, அப்பகுதி மக்கள், காவல் துறையில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மலை போல குவிந்திருந்த, கோவில் ஆவணங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.மேலும், அந்த ஆவணங்களை எரிப்பதற்கு, தடை விதித்தனர். இது தொடர்பாக, கோவில் உதவி கமிஷனர், ஜோதிலட்சுமியிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், உரிய அனுமதியுடன் எரிப்பதாகக் கூறி, அதற்கான கடிதத்தையும், காவல் துறையினரிடம் வழங்கினார். அந்த கடிதத்தில், கோவிலின் தேவையற்ற ரசீதுகளை எரிக்க மட்டுமே அனுமதி இருந்தது. இதையடுத்து, ’எரிக்க முயற்சிக்கப்பட்ட ஆவணங்களுக்கான அனுமதி எங்கே?’ என, காவல் துறையினர், கேள்விகளை எழுப்பினர். அதற்கு உரிய பதிலளிக்க முடியாமல், அறநிலையத் துறை உதவி கமிஷனர், காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், தற்போது, ஆவணங்கள் குறித்த புகாருக்கு, உடனடியாக பதிலளிக்க வேண்டும் என, காவல் துறையினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அப்போ செல்லாக்காசு; இப்போ ஆவணம் எரிப்பு: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆவணங்கள் எரிப்பு சம்பந்தமான புகாரில் சிக்கியுள்ள, உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி, ஏற்கனவே, பக்தர்கள் காணிக்கையை செல்லாக்காசாக்கிய வழக்கில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை, பண மதிப்பிழப்பு செய்த போது, கோவில்களில், உண்டியலில் வசூலான பணத்தினை மாற்றுவதற்கு, போதிய கால அவகாசம் கொடுத்தது. அந்த காலகட்டத்தில், பார்த்தசாரதி கோவில் இணை கமிஷனர் பொறுப்பில் இருந்து, ஜோதிலட்சுமி நீக்கப்பட்டு இருந்தார். ஆனால், இணை கமிஷனராக பொறுப்பேற்று இருந்த அதிகாரியிடம், உண்டியல் சாவியை ஒப்படைக்கவில்லை. இதனால், உண்டியல் திறக்க முடியாமல் போனதால், பக்தர்கள் காணிக்கை, 38 லட்சம் ரூபாய் வரை, செல்லா காசாகிப்போனது. இது தொடர்பாக, அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஜோதிலட்சுமிக்கு, சமீபத்தில், ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.இந்நிலையில், தற்போது, ஆவணம் எரிப்பு புகாரிலும், சிக்கி தவித்து வருகிறார்.  -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !