பச்சை பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்
அழகர்கோவில்: பச்சை பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். நாளை (ஏப்.,30) காலை 6.15 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இவ்விழாவை காண, பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவர். சிறப்பு மிக்க சித்திரை திருவிழாவிற்காக இன்று மாலை, 4:45 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
நாளை எதிர்சேவை : இதற்காக, அழகர்கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து, இன்று மாலை, 4:45 மணிக்கு மேல், மாலை, 5:15 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள், மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் உள்ள திருக்கண்களில் காட்சி தருவார். மூன்று மாவடியில் நாளை காலை, 6:00 மணிக்கு எதிர்சேவை நடக்கிறது. மதுரை அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டபத்திற்கு மாலை, 5:20 மணிக்கு வருகிறார். மாநகராட்சி அலுவலகத்தில் வாண வேடிக்கை நடக்கிறது.
வைகையில் கள்ளழகர் : தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நாளை இரவு, 9:30 மணிக்கு எழுந்தருளும் கள்ளழகர், இரவு, 12:00 மணிக்கு வைகை நோக்கி புறப்படுகிறார். தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.பின், தங்கக்குதிரை வாகனத்தில், நாளை மறுநாள் காலை, 5:45 - 6:15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.