உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னொளியில் அவிநாசி தெப்பத்தேர் உற்சவம்

மின்னொளியில் அவிநாசி தெப்பத்தேர் உற்சவம்

திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது. அவிநாசியில் உள்ள, பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும், வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்து வந்தது. கடந்த, 25ம் தேதி திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, 26ம் தேதி பஞ்சமூர்த்திகளும், பெருமாளும், தேருக்கு எழுந்தருளினர். சிவன், பார்வதி, பாலமுருகன் ஆகியோர் அமர்ந்த நிலையில் உள்ள, சோமாஸ்கந்தராக திருத்தேரில் எழுந்தருளி, தேர் வீதியில் உலா வந்தனர். நேற்று முன்தினம், ஸ்ரீகருணாம்பிகை அம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, தெப்பத்தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது. ஸ்ரீசந்திரசேகரர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தேரில் எழுந்தருளினர். சுபிட்ச மழை வேண்டும் ராகங்களில், இன்னிசை பண் முழங்க, நீராழி மண்டபத்தை வலம் வந்து, உற்சவ மூர்த்திகள் அருள்பாலித்தனர். தெப்பக்குளத்தின் நான்கு புறமும் கூடியிருந்த பக்தர்கள், தெப்பத்தேரில் வந்த உற்வசரை, மலர்துாவி வழிபட்டனர். தெப்பத்தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால், கோவில் வளாகமும், குளமும், மின்னொளியில் ஜொலித்தன. இன்று நடராஜர் தரிசன காட்சியும், நாளை மஞ்சள் நீர் உற்சவ விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !