சித்ராபவுர்ணமி: சைவமும் வைணவமும் இணைப்பு
பழநி:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பழநியில் சிவன், பார்வதி, முருகன் மற்றும் பெருமாள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பழநியில் சைவம், வைணமும் இணைக்கும் வீதமாக, ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று, பழநியில் தனித்தனி கோயில்களில் உள்ள பெருமாள், சிவன், முருகர் ஆகியோரை ஒன்றாக வைத்து வழிபடுகின்றனர். அதன்படி நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன்கோயிலில் இருந்து சிவன், பார்வதி ரிஷப வாகனத்திலும், முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் மயில்வாகனத்திலும், லட்சுமி நாராயணப்பெருமாள் சப்பரத்தில் வீதிஉலா வந்தனர். வாசவி மகாலில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அதன்பின் அந்தந்த கோயிலுக்கு சுவாமி, பெருமாளை கொண்டுசென்றனர். ஏற்பாடுகளை பழநி ஆர்ய வைஸ்ய சமாஜம் நிர்வாகிகள் செய்தனர்.
வடமதுரை: தென்னம்பட்டியில் சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதற்காக கடந்த பல நாட்களாக கோயில் சார்ந்த தலைகட்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வந்தனர். நேற்று அவரவர் ஊர்களில் இருந்து தீர்த்த, பால் குடங்களுடன் வந்து சவடம்மன், நந்தீஸ்வரன், விநாயகர், பாலமுருகன், மதவாணையம்மன், ஆலம்மன் கோயில் சன்னதிகளில் தீர்த்த, பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் நந்தீஸ்வரன், சவடம்மன் கோயில் வளாகங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கவுரவ தலைவர்கள் சுப்பிரமணி, சுப்பையன் தலைமையில் நடந்தது. பரமசிவம் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார். விழாவில் கோயில் தலைவர் போசப்பன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் காளிமுத்து பேசினர்.
சின்னாளபட்டி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு திரவிய அபிேஷகம் நடந்தது. வெற்றிலை, துளசி, வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ஓம்கார விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிேஷகம் நடந்தது. மூலவருக்கு அன்னக்காப்பு, நாகாபரண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவசக்தி, பஞ்ச பூதங்கள், எட்டு திசைகள், 15 திதிகள், நவக்கிரகங்கள், 18 சித்தர்களுக்கான திருமறை வழிபாடு நடந்தது. விழாவில், ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிேஷகம் நடந்தது. உள்பிரகாரம் முழுவதும் காய், கனி வகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தேவார, திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.