படுகரின மக்களின் பண்டிகை: நீலகிரியில் அரசு விடுமுறை!
ஊட்டி:ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் அரசு விடுமுறை இன்று அளிக்கப்பட்டுள்ளது.கலெக்டர்(பொ) நிர்மல்ராஜ் அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படுகர் இனமக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா, 11ம் தேதி (இன்று), கோத்தகிரி வட்டம் பேரகணி கிராமத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற மாநில முதல்வர், நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இவ்விடுமுறையானது பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு குந்தகம் ஏற்படாத வண்ணமும், அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும் மாவட்டத்தில் உள்ள கருவூலகங்கள் குறைந்த பட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்., 11ல் அரசு அலுவலகங்கள் இயங்கும்.இவ்வாறு, நிர்மல்ராஜ் கூறியுள்ளார்.