உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!

சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!

தஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் ஸ்வாமிகளின் 165வது ஆராதனை விழா, கோலாகலமாக துவங்கியது.தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா சார்பில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 165வது ஆராதனை விழா, மங்கள இசையுடன் துவங்கியது.

திருப்பதி தேவஸ்தான சேர்மனும், எம்.பி.,யுமான, கண்மூரி பாசிராஜு குத்துவிளக்கேற்றி, ஆராதனை விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:சத்குரு தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்ததால், திருவையாறு புண்ணிய பூமியாக விளங்குகிறது. இவ்விழா தொடர்ந்து, 165 ஆண்டாக நடப்பதில் இருந்தே, தியாகராஜரின் தியாகம் மற்றும் அவரது கீர்த்தனையின் பெருமையை உணர முடிகிறது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த ஊராக இருந்தாலும், இடம் கொடுத்தால், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 50 கி.மீ., இடைவெளியில் பக்தர்களுக்கு தங்குமிடம் கட்டித்தர தயாராக உள்ளோம். இவ்வாறு கண்மூரி பாசிராஜு பேசினார். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன், ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் உட்பட பலர் பங்கேற்றனர். துவக்கவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு, ஷேக் மகபூப் சுபானி- காலிஷா பீவி மகபூப் நாதஸ்வரம், கோவிலூர் கல்யாணசுந்தரம், ஸ்ரீரங்கம் முருகன் தவில் வாசிக்க மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முதல் ஜன.,13 வரை, காலை 8 முதல் இரவு 11 மணி வரை இசைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜன.,12 ல், காலை 6 முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோற்சவ சபையின் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை, ஜன.,13 காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு பஞ்சரத்ன மல்லாரியுடன், தியாகராஜ சுவாமி திருவுருவச்சிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன், நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !