உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் வி.ஐ,பி.,க்கள் தரிசனத்திற்கு தடை வருகிறது: பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அதிரடி!

திருப்பதியில் வி.ஐ,பி.,க்கள் தரிசனத்திற்கு தடை வருகிறது: பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அதிரடி!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த வி.ஐ.பி.,க்களுக்கு சாமி தரிசனம் செய்விப்பதில், தேவஸ்தான நிர்வாகம் முக்கியத்துவம் வழங்கவில்லை என அவர்கள் கருதினால், பெரிய மனதுடன் மன்னித்து விடும்படி வேண்டுகிறேன், என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார். திருப்பதியில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சோப லட்சம் பக்தர்கள், சாமி தரிசன செய்ய வருவார்கள்.இவ்வாறு வருபவர்கள் தரிசனம் செய்ய, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்தாண்டு கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அதே சமயம் வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுளை செய்யும்பொருட்டு, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலம், முன்பதிவு செய்து கொண்டு வருபவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக வருவேன் என உறுதியளித்த பக்தர்களுக்கு, 100 ரூபாய் தரிசன டிக்கெட்டும், நேரடியாக திருமலைக்கு வந்து தரிசனத்திற்கு வருபவர்களுக்கு, 300 ரூபாய் டிக்கெட்டும் வழங்கப்பட்டது.

பாதயாத்திரைக்கு முக்கியத்துவம் : இவ்வாறு முன்பதிவு பெற்றவர்கள் இந்தியா முழுவதிற்கும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். டிக்கெட் வாங்கியவர்கள் 5 மற்றும் 6ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல, வெகுசிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வராஹக சாமி சன்னிதியில் துவங்கி, புஷ்கரணி வழியாக முகத்துவாரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோவில் பிரதான கோபுரத்திற்கு எதிரே இருந்த இடத்தில், பிரத்யேகமாக பந்தல் போட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தராக செல்லும்படி பாதை அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பக்தரும் ஒன்றரை மணி நேரத்திற்குள் சாமி தரிசனம், வைகுண்ட வாசல் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

முன்னேற்பாடு முக்கியம் : முன்பதிவு பத்து நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதால், 5 மற்றும் 6ம் தேதிகளில் திருமலைக்கு வந்த பக்தர்கள் உடனடியாக தரிசனம் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு இரண்டு நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், வி.ஐ.பி.,க்களுக்கும் தனி ஏற்பாடு செய்வது நிறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக, திருமலையில் சாமி கும்பிட வருவது என்றால், ரயில் பயணத்திற்கு எப்படி முன்பதிவு செய்து வருவோமோ அதுபோல் ஒரு மாதம், அல்லது குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டு வந்தால் எளிதாக இருக்கும் என்ற நிலைமை உருவாகி விட்டது. இந்த ஏற்பாட்டை, அடிக்கடி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, வி.ஐ.பி.,க்களுக்கு தரிசன ஏற்பாடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமலைக்கு வந்த வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், பக்தர்கள் தரப்பில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது. கூட்டம் இல்லாத நாட்களில் வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பதியில் நிருபர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் தரிசனம் செய்ய வந்திருந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், வி.ஐ.பி.,க்கள் போன்ற பதவி அந்தஸ்து பெற்றுள்ளவர்களை, மூன்று பிரிவுகளாக பிரித்து வைகுண்டம்-1 வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,டிக்கெட் பெற்ற மேலும் சிலர் வைகுண்டம், 17, 25 வளாகம் மற்றும் செல்லார் கியூ வரிசை வழியாகவும், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொலை தூர தரிசனம் : வி.ஐ.பி.,க்களை கோவிலில் சாமி தரிசனம் செய்யவிடாமல், தொலைதூர தரிசனம் செய்வித்து அனுப்பி விட்டதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேலும் முக்கிய அதிகாரிகள் பலரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது மாநில அரசிடம் புகார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தெய்வ சன்னிதியில் அனைத்து பிரிவு பக்தர்களும் ஒன்று என்ற எண்ணத்துடன், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சாமி தரிசன விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. சில நேரங்களில் சிறு தவறுகள் நடக்கின்றன. இந்த அனுபவத்தை கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர் தெரிவித்தார். மேலும், திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து, தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து அதற்கான முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாபிராஜூ கூறினார். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, 4,700 வி.ஐ.பி., டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஏராளமானோர் தேவஸ்தான நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !