பழநி சண்முகநதியின் புனிதம் காப்பதில் அலட்சியம்!
பழநி : பழநி சண்முகநதியின் புனிதத்தை சீர்குலைக்கும் செயல்கள் தொடர் கதையாகியுள்ளன. இதை தடுக்க நடவடிக்கை இல்லாததால், பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பெரும்பாலானோர், மலைக்கோயில் தவிர, சண்முகநதியில் தீர்த்தமாடுவர். பழநியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளபோதும், சண்முகநதிக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை உள்ளது. இங்கு, ஓட்டல், இளநீர், குளிர்பானம் என, ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்களை ஆதாரமாகக் கொண்டிருந்தபோதும், சுகாதாரமான முறையில் பொருட்களை வழங்குவதில் வியாபாரிகள் அலட்சியமாக உள்ளனர். திறந்த வெளி, மரங்களின் நிழல்பகுதி போன்ற இடங்களில்,உணவுப் பொருட்கள் தயாராகின்றன. திறந்த பாத்திரங்களில் அவை வைக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீர், குப்பைகளை அகற்றுவது என, எந்த வசதியும் இல்லை. புனிதநீராட வரும் பக்தர்கள், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். புனிதநீரான சண்முகநதி, பெரும்பாலும் வாகனங்களை கழுவும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. தீர்த்தம் எடுக்கும் இப்பகுதிகளில், வாகனங்களை நிறுத்தி கழுவுவதால் பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர். இப்பகுதியில் சுகாதாரம் காப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகமும் அலட்சியம் தவிர்க்க வேண்டும்