உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி, செங்கோட்டை கோயில்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்

தென்காசி, செங்கோட்டை கோயில்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்

குற்றாலம் : தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் கூட்டம் குலேசகரநாதர் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் வெங்கிடாசலம் தலைமை வகித்தார். இன்ஜினியர் கிருஷ்ணன், அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணப் பெருமாள் பிள்ளை, இலஞ்சி பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கணேசன் பட்டர் வரவேற்றார். தற்போது தென்காசி, செங்கோட்டை வட்டத்திலுள்ள கோயில் பணிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகுறது. கடந்த 1956ம் ஆண்டு முதல் இந்த வட்டாரங்களில் உள்ள பல கோயில்கள் கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாக பொறுப்பில் உள்ளது. இக்கோயில்களை பக்தர்கள் நலன் கருதி உடனே பிரித்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மடத்துப்பள்ளியில் ஊழியர் இல்லாததால் நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய முடியாத நிலை உள்ளதை தவிர்க்க ஊழியர் நியமிக்க வேண்டும். கோயில்களில் தோரோட்டம் நடக்கும் போது உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏவிஎஸ் அய்யர் குரூப் நாராயணன், ஆசிரியர்கள் சிவபிரகாசம், செண்பக குற்றாலம், ஓய்வு பெற்ற தாசில்தார் குமரேசன், சின்னச்சாமி தேவர், ரமேஷ் ஆசாரி, தற்காலிக நாட்டாண்மை முருகன், வைத்தியர் கருப்பசாமி, கம்பவுண்டர் குமார், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !