சபரிமலைக்கு பக்தர்கள் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை: காட்டுயானைகள், கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரிப்பு!
சபரிமலை: சபரிமலை தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் நிலையில், அவர்களுக்கு, கொள்ளையர்கள் மற்றும் காட்டு யானைகளால் பீதியும், பதட்டமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், மூன்று குட்டி யானைகள் உட்பட, 12 யானைகள் மீண்டும் தென்பட்டன. ஏழு கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கினர். ரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மகரஜோதி உற்சவம் நடந்து வருகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பது ஒருபுறமிருக்க, அங்குள்ள காட்டில் இருந்து, காட்டு யானைகள் வெளியே வந்து, பக்தர்களை பயமுறுத்துவதும், கடைகளையும், உடமைகளையும் தாக்கி நாசப்படுத்துவதும் தொடர்கிறது. இந்நிலையில், சபரிமலையில் உரல்குழி பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, மூன்று குட்டி யானைகள் உட்பட, 12 காட்டு யானைகள் தென்பட்டன. அங்கு சபரிமலையில் பல்வேறு தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை நாசம் செய்தன. மேலும், அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், வனக் காவலர்கள் விரைந்து சென்று, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களது பெரும் முயற்சியினால், ஒன்றரை மணி நேரத்திற்கு பின், காட்டு யானைகள் வனத்திற்குள் திரும்பின. தமிழகத்தில் இருந்து புல்மேடு வழியாக சபரிமலைக்கு அதிகாலை நேரத்தில் செல்லவில்லை என்பதால், பக்தர்கள் யாரும் தாக்கப்படவில்லை. மேலும், அதிகாலை என்பதால், சபரிமலை சன்னிதானத்தில் இருந்த பக்தர்களுக்கும், இது குறித்து தெரியவில்லை.
மொபைல் திருடிய ஏழு பேர் கைது: சபரிமலை பகுதியில் பக்தர்களிடம் இருந்து, உடமைகள் திருடு போவதை தடுக்க, சன்னிதானம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் ஏழு பேர் கொண்ட கும்பல் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜா, 30, அரசன், 53, மணி, 55, பாண்டி, 30, மருதமுத்து, 38, ராம்ராஜ், 65 மற்றும் பழனிவேல், 55 ஆகியோர் என்பது தெரிந்தது. பக்தர்களிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்த, 16 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.