உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் தருவான்!

இறைவன் தருவான்!

அர்ச்சகர் ஒருவர், தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் நெடு நேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், “ஐயா... என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். “சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்குவதற்காக, வைத்திருந்த காசைத் தவறவிட்டுவிட்டேன். அதைத்தான் தேடுகிறேன்!” என்றார். “கிடைக்கவிட்டால் பரவாயில்லை... நான் காசு தருகிறேன். பழம் வாங்கி பூஜித்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி, காசு தந்தார். அர்ச்சகரும் மகிழ்ச்சியோடு அந்தக் காசுக்கு பழம் வாங்கிச் சென்று, சிவபூஜை செய்து முடித்தார். காலம் நகர்ந்தது. அர்ச்சகர், காசுதந்தவர் இருவரும் மேலுலகம் சென்றார்கள். அங்கே அவர்களை யமதர்மன் மரியாதையோடு வரவேற்று, அர்ச்சகரை தங்க சிம்மாசனத்திலும், காசு தந்தவரை ரத்ன சிம்மாசனத்திலும் அமர வைத்து உபசரித்தான். அப்போது அங்கு வந்த தேவேந்திரன் அதைப் பார்த்து, “யார் இந்தப் புண்ணியாத்மாக்கள்?” என்று கேட்டார். உடனே எமதர்மன், “தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும் சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். ரத்னசிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர், சிவபூஜை தடைபடாமல் நடக்க, பழம் வாங்க காசு தந்து உதவி செய்தவர்!” என்றார்.

அதைக் கேட்ட இந்திரன் ஆச்சரியத்தோடு, “பூஜை செய்பவரைவிட, அதற்கு உதவுபவருக்கே அதிக புண்ணியம் என்பதை இன்று உணர்ந்தேன்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு, தேவலோகம் சென்றார். யாகம், பூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரைவிட, அதற்கு உதவி செய்பவர்களுக்கே புண்ணியம் அதிகம்! உங்கள் இருப்பிடத்துக்குப் பக்கத்தில் எந்தக் கோயிலிலாவது அன்றாட பூஜைக்கு உரிய வருமானம் இல்லாத நிலை இருந்தாலோ அல்லது புனரமைப்பு, கும்பாபிஷேகம் என்று திருப்பணி ஏதாவது நடந்தாலோ உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்! அது எவ்வளவு சிறிய உதவியாக இருந்தாலும் பரவாயில்லை! கொஞ்சம் கொடுத்தாலும் மனமார்ந்த பக்தியோடு கொடுங்கள். இறைவன் நெஞ்சம் குளிர்ந்து, பலமடங்கு புண்ணியத்தை பரிசாக உங்களுக்குத் தருவான்! அதன் பலனாக உங்கள் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !